+2 மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் !

Jul 22, 2021 06:00 am

இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லை என்று கருதும் மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்து மீண்டும் தேர்வெழுத தமிழக அரசு அனுமதித்துள்ளது.

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் தங்களின் மதிப்பெண் பட்டியலை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மதிப்பெண்கள் குறிப்பிட்ட சில வழிமுறைகளில் கணக்கிடப்பட்டு அண்மையில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இன்று காலை 11 மணி முதல் மதிப்பெண்கள் பட்டியலை இணையதளங்களில் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனக்கூறி அதற்கான இணையதள பக்கத்தை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மதிப்பெண் பட்டியலை http://www.dge.tn.gov.in, http://www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அனைத்து தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளிகளுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லை என்று கருதும் மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்து மீண்டும் தேர்வெழுத தமிழக அரசு அனுமதித்துள்ளது. அதற்கான தேர்வு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் நடத்தப்பட வாய்ப்புள்ளது. 12ஆம் வகுப்புத் தேர்வைத் தொடர்ந்து 10ஆம் வகுப்பு மதிப்பெண் விவரங்களும் விரைவில் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருந்தார்.

இந்நிலையில், பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில், வாட்ஸ்அப் மூலமாக மாதம்தோறும் அலகு தேர்வுகள் நடத்த தமிழக பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள், மாணவர்களுக்கென தனி வாட்ஸ்அப் குழுக்கள் அமைப்பது, மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவது குறித்து ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கல்வி தொலைகாட்சி வாயிலாக ஜூன் மற்றும் ஜூலை ஆகிய 2 மாதங்களில் நடத்தி முடிக்கப்பட்ட பாட பகுதிகளுக்கு அலகுத் தேர்வை நடத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை 50 மதிப்பெண்களுக்கு நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு தேர்வு எழுதும் மாணவர்கள் விடைத்தாளில் பெயர், தேர்வுத்துறையால் வழங்கப்பட்டுள்ள பதிவு எண் இடம்பெற வேண்டும் என்றும், ஆசிரியர்கள் விடைத்தாள்களை வாட்ஸ்அப் மூலம் திருத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்குவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அலகு தேர்வுகளை நடத்துவதன் மூலம், மாதம் தோறும் மாணவர்களின் கல்வித்திறனை மதிப்பீடு செய்ய மிகவும் பயனுடையதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read next: முதல்வன் பட பாணியில் அண்ணாமலை பாஜக தலைவராக பொறுப்பேற்ப்பு !