அடுத்த ஐபிஎல் சீசனிலும் தோனி ஆடுவாரா? ரகசியம் சொன்ன முன்னாள் லெஜெண்ட் கிரிக்கெட்டர்

May 13, 2022 01:31 pm

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த 2019ம் ஆண்டு ஓய்வுபெற்ற தோனி ஐபிஎல்லில் மட்டும் ஆடிவருகிறார். 2020 ஐபிஎல்லில் ஆடியபோது, இதுதான் உங்களது கடைசி ஐபிஎல் சீசனா என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது, கண்டிப்பாக இல்லை என்றார் தோனி. தோனி கூறிய அந்த “கண்டிப்பாக இல்லை”(Definitely Not) என்ற வாக்கியம் செம வைரலானது.

அதன்பின்னர் 2021 ஐபிஎல்லில் ஆடி சிஎஸ்கே அணிக்கு 4வது ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் தோனி, 2022 நடப்பு ஐபிஎல் சீசனிலும் ஆடிவருகிறார். கேப்டன்சியிலிருந்து விலகிய தோனி, சீசனின் இடையே மீண்டும் கேப்டன்சியை ஏற்று சிறப்பாக செயல்பட்டார்.

சிஎஸ்கே அணி மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக நேற்றைய போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது. மும்பைக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி வெறும் 97 ரன்களுக்கு சுருண்டது. பவர்ப்ளேயிலேயே களத்திற்கு வந்துவிட்ட தோனி, கடைசி வரை ஆட்டமிழக்காமல் 36 ரன்கள் அடித்தார். அவர் ஒருமுனையில் நிலைத்து நின்று ஆட, மறுமுனையில் மற்ற அனைத்து வீரர்களும் ஆட்டமிழந்ததால் 97 ரன்களுக்கு சுருண்டது சிஎஸ்கே அணி.

இந்த போட்டியில்  பவர்ப்ளேயில் களத்திற்கு வந்த தோனி, பக்குவத்துடனும் அதேவேளையில் அடித்தும் ஆடிய விதம் அனைவரையும் கவர்ந்தது. 40 வயதிலும் அவர் சிங்கிள் மற்றும் 2 ரன்களை வேகமாக ஓடி எடுக்கும் விதம், அவர் அடுத்த சீசனிலும் ஆடுவார் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது.

மும்பைக்கு எதிரான போட்டியில் தோனி ஆடிய மற்றும் ஓடிய விதத்தை பார்த்தபின்னர் பேசிய சுனில் கவாஸ்கர்,  தோனி விளையாடிய விதம் அபாரமானது. இன்னும் முழு எனர்ஜியுடன் இருக்கிறார் என்பதை அவர் ஆடுவதை பார்த்தாலே தெரிகிறது. வேகமாக ரன் ஓடுவதாக இருக்கட்டும்; அடித்து ஆடுவதாக இருக்கட்டும். முன்புபோல் இப்போதும் மிகவும் சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் இருக்கிறார். 

தோனி ஓய்வுபெறுவாரா என்றால், 2020 ஐபிஎல்லில் அவரிடம் இந்த கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர் என்ன பதில் கூறினாரோ அதுதான் பதில்.. கண்டிப்பாக இல்லை. 2020 ஐபிஎல்லில் ஓய்வு குறித்த கேள்விக்கு கண்டிப்பாக ஓய்வு இல்லை என்று பதிலளித்த தோனி, அடுத்த சீசனில் கோப்பையை வென்றார் என்பதை சுட்டிக்காட்டி தோனியின் ஃபிட்னெஸை பார்க்கையில் இப்போதைக்கு ஓய்வுபெறமாட்டார் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

Read next: பேரறிவாளன் வழக்கு: குடியரசுத் தலைவருக்கே முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது