கினியாவில் இராணுவ புரட்சி! காலவரையற்ற ஊரடங்கு - எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள்

Sep 07, 2021 03:46 am

கினியாவில் இராணுவ சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றியிருக்கும் சிறப்புப் படையினர் அந்நாட்டு ஜனாதிபதியை கைது செய்து காலவரையற்ற ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்துள்ளனர்.

‘ஜனாதிபதியை கைது செய்த பின் அரசியலமைப்பை ரத்துச் செய்ய நாம் முடிவு செய்துள்ளோம் என்று இராணுவ சீருடை அணிந்து கையில் துப்பாக்கியை ஏந்திய ஒருவரின் வீடியோ அறிவிப்பு ஒன்று ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.

கினியாவின் நிலம் மற்றும் வான் எல்லைகள் மூடப்பட்டதாகவும் அரசாங்கம் கலைக்கப்பட்டு விட்டதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக வெளியான வீடியோ ஒன்றில் 83 வயதான ஜனாதிபதி அல்பா கொன்டே இருக்கையில் அமர்ந்திருக்க அவரை சூழ்ந்து இராணுவத்தினர் இருப்பது தெரிகிறது. 

இதன்போதும் தாம் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக இராணுவ வீரர் ஒருவர் கேட்கும் கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. 

அரசாங்கத்தின் தவறான நிர்வாகமே இராணுவ சதிப்புரட்சியை தூண்டியதாக அரச தொலைக்காட்சியில் தோன்றிய சிறப்புப் படையைச் சேர்ந்த லெப்டினன்ட் கேணல் மமடி டும்பாயோ தெரிவித்தார்.

ஐ.நா செயலாளர் நாயகம் அன்டானியோ குட்டரஸ் மற்றும் ஆபிரிக்க ஒன்றியம், இந்த இராணுவ சதிப்புரட்சியை கண்டித்திருப்பதோடு ஜனாதிபதி கொன்டேவை உடன் விடுவிக்கும்படி கோரியுள்ளார்.

இந்த ஆட்சி கவிழ்ப்புக்கு கண்டனம் வெளியிட்டிருக்கும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கினியாவின் மீதான அமெரிக்காவின் ஆதரவு மட்டுப்படுத்தப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.


Read next: அதிஉயர் பாதுகாப்பு சிறையில் இருந்து தப்பி ஓடிய ஆறு பாலஸ்தீன தீவிரவாதிகள்