ரஷ்யா செல்லும் குட்டரஸூக்கு உக்ரைன் எதிர்ப்பு

Apr 25, 2022 04:50 am

ஐக்கிய நாடுகள் சபை தலைமைச் செயலாளர் அந்தோனியோ குட்டரஸ் உக்ரைனுக்குச் செல்லும் முன்னர், ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொள்வது குறித்து உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி குறைகூறியுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினையும் செலென்ஸ்கியையும் நேரடியாகச் சந்திக்க குட்டரஸ் திட்டமிட்டுள்ளார். அமைதிக்கான கோரிக்கைகளை அவர் முன்வைக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும் குட்டரஸின் பயண ஏற்பாட்டில் எந்த நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை என்று செலென்ஸ்கி குறிப்பிட்டார்.

ரஷ்ய வீதிகளில் யாரும் மாண்டுகிடக்கவில்லை என்பதையும், உக்ரைன்தான் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கியேவ் வட்டாரத்தில் மட்டும் 1,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதை செலென்ஸ்கி குறிப்பிட்டார்.

இந்நிலையில் மொஸ்கோ மற்றும் கியேவுக்கு பயணிப்பதற்கு முன் குட்டரஸ், துருக்கிக்கு செல்கிறார். இன்று திங்கட்கிழமை அங்காரா செல்லும் அவர் துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவானை சந்திக்கவுள்ளார்.

தொடர்ந்து வரும் செவ்வாய்க்கிழமை மொஸ்கோ சென்று ரஷ்ய ஜனாதிபதியை சந்திக்கவிருக்கும் அவர் வரும் வியாழக்கிழமை உக்ரைன் செல்லவுள்ளார்.


Read next: கடற்படையின் தவறான எண்ணத்தினால் 6 அகதிகள் உயிரிழப்பு