ரஜினிகாந்தின் கட்சியின் பெயர், சின்னம் பற்றிய உத்தியோகப்பூர்வ தகவல் வெளியானது

Dec 15, 2020 07:55 am

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ரஜினியின் கட்சியினுடைய பெயர் “மக்கள் சேவை கட்சி” என்று தெரிய வந்துள்ளது.

தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ள ஆவணத்தில் அந்தகட்சியின் நிறுவனராக ரஜினிகாந்த்தின் பெயர் இடம் பெற்றிருப்பதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

234 தொகுதிகளிலும் இந்த கட்சி போட்டியிடும் என்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ரஜினியின் இந்த புதிய கட்சிக்கு தேர்தல் சின்னத்தையும் தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. 

தேர்தல் சின்னமாக “ஆட்டோ” தேர்வு செய்து ஒதுக்கப்பட்டுள்ளது. 

ரஜினி தரப்பில் “பாபாவின் முத்திரை” சின்னத்தை ஒதுக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் ஆணையம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

பாபாவின் இரண்டு விரல்களை உயர்த்தி காட்டும் ஹஸ்த முத்திரை சின்னம் காங்கிரஸ் கட்சியின் கை சின்னம் போன்று தோற்றம் அளிக்கும் என்பதால் அதை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்து விட்டதாக தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து “ஆட்டோ” சின்னத்தை ரஜினி கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

ரஜினி வருகிற 31-ந் தேதிதான் கட்சி பெயரை வெளியிட இருந்த நிலையில் அவரது கட்சி பெயர் “மக்கள் சேவை கட்சி” என்று தெரிந்திருப்பதால் ரசிகர்கள் அதை வரவேற்றுள்ளனர். 

கட்சி பெயரையும், சின்னத்தையும் மக்களிடம் கொண்டு செல்ல வார்டு வாரியாக நிர்வாகிகளை நியமித்து பணியாற்ற முடிவு செய்துள்ளனர்.

தமிழக அரசியலில் இதுவரை ரஜினி அரசியல் பிரவேசம் தொடர்பான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் புதியகட்சி, சின்னமும் பெயரும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read next: இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து   முல்லைத்தீவு - வர்த்தக சங்கத்திற்குட்பட்ட கடைகள், மற்றும் சந்தைத் தொகுதிகள் என்பன மூடப்பட்டுள்ளன.