இரண்டாம் அடுக்குக் கட்டுப்பாட்டுக்குள் நுழைந்த லண்டன் நகரம்

1 month

கொவிட் 19 வைரஸ் தொற்றை அடுத்து லண்டன் நகரம் கடுமையான நெருக்கடிகளை சந்திக்கவுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேசத்தின் முக்கிய நிதியியல் நகராக கருதப்படும் லண்டன் நாளை முதல் கடுமையான முடக்கத்துக்கு உட்படவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

மிகத் தீவிரமாகப் பரவிவரும் கொரோனாவின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக பிரித்தானிய பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வருடம் சீனாவில் ஏற்பட்ட கொரோனாவின் தாக்கம் உலகளாவிய ரீதியில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உயிரிழப்புக்களை ஏற்படுத்தியிருப்பதுடன் பிரித்தானியாவிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பாவில் அதிகளவான கொவிட் 19 மரணங்கள் பதிவான நாடாக பிரித்தானியா கருதப்படுவதுடன் 43155 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் குறிப்பிடுகின்றன.

9 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட லண்டன் நகரம் உயர் எச்சரிக்கைக்கு உரிய வலயமாக  பிரகடனம் செய்யப்பட்டுள்ளது என பிரித்தானிய சுகாதார செயலாளர் மாட் ஹன்கொக் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மக்கள் ஒருவரோடு ஒருவர் நெருக்கமான சந்திப்புக்களை மேற்கொள்வது கடுமையான முறையில் தடுக்கப்பட்டுள்ளதுடன் பயணங்களும் தடுக்கப்பட்டுள்ளன.

கொரோனாவைக் கட்டுப்படுத்த அறிவியல் பொருத்தமான வழிமுறையைக் கண்டுபிடிக்கும் வரை நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய தேவை உள்ளது என பிரித்தானிய சுகாதார செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தியச்செலாவணி சர்வதேச வங்கி நிதியியல் நடவடிக்கைகளுக்கு புகழ் பெற்ற லண்டன் நகரம் முடக்க நிலைக்குட்பட்டால் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கும் என்பதுடன் பிரித்தானிய பொருளாதாரத்தையும் நெருக்கடி நிலைக்கு இட்டுச்செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வருகின்ற குளிர்காலம் லண்டன் மக்களுக்கு கடுமையானதாக இருக்கும் என்று லண்டன் மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தானியாவின் முக்கியமான பொருளாதார நகரங்கள் உள்ளிட்ட பிரபல நகரங்கள் தொடர்ந்தும் முடக்க நிலைக்குச் செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை பிரான்ஸிலும் கொரோனாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் நான்கு வாரங்களுக்கு இரவு நேரத்தில் ஊரடங்குச் சட்டத்தை பிறப்பிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Read next: 6 வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு