ஆஸ்திரேலியாவில் 6 மணி நேரம் கேட்பாரின்றி வெயிலில் வாடிய குழந்தையின் பரிதாப நிலை

May 06, 2022 03:39 pm

ஆஸ்திரேலியாவில் ஆறு மணி நேரமாக கேட்பாரின்றி வெயிலில் வாடிய மூன்று வயது குழந்தை உயிருக்கு போராடிவருகிறது. 

இந்த சம்பவம் குவின்ஸ்லாந்தில் புதன்கிழமை அரங்கேறியுள்ளது. 

ராக்ஹாம்ப்டன் அருகே கிரேஸ்மியரில் உள்ள லே ஸ்மைலிஸ் ஆரம்பகால கற்றல் மையம் வெளியே உள்ள பேருந்தில் அந்த குழந்தை கண்டெடுக்கப்பட்டது. 

சம்பவம் நடைபெற்ற புதன்கிழமையன்று 29.2 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளதாக பிராந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.

ஆஸ்டின் என்ற அந்த குழந்தை உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பின்னர், குவின்ஸ்லாந்து குழந்தைகள் நல மருத்துவமனைக்கு விமானம் மூலம் அழைத்து செல்லப்பட்டதாகவும் தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் விரிவாக பேசிய காப்ரிகோர்னியா மாவட்ட காவல்துறை துப்பறியும் ஆய்வாளர் டேரின் ஷாட்லோ, காலை 9 மணிக்கு குழந்தை பேருந்தில் ஏறியுள்ளது. 6 மணி நேரத்திற்கு பிறகு அவர் சுய நினைவின்றி கண்டெடுக்கப்பட்டார். அப்போது பேருந்தில் இருந்த ஒரே குழந்தை ஆஸ்டின் என்பது தெரியவந்தது. 

குழந்தைகள் நல மையத்திற்குத் திரும்பியபோது, ​​​​பேருந்தில் இருந்த டிரைவரும் மற்றொரு நபரும் ஆஸ்டின் இருப்பதை பார்க்காமல் சென்றுவிட்டனர். பின்னர், ஊழியர்கள் அவரை பேருந்தில் கண்டுபிடித்தனர். சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டது என்றார்.

குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விவரித்த மருத்துவமனை பணியாளர், ராக்ஹாம்ப்டனில் உள்ள உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு துணை மருத்துவர்கள் குழந்தைக்கு சுயநினைவை கொண்டுவந்துவிட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Read next: அமெரிக்கா கொடுத்த தகவலின் பெயரிலேயே ரஷ்யாவின் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது