சிங்கப்பூரில் மணப்பெண்ணிடம் மோசமாக செயற்பட்ட மாப்பிள்ளைத் தோழருக்கு கிடைத்த தண்டனை!

Sep 19, 2022 05:44 pm

சிங்கப்பூரில், திருமண நாள் இரவில் மணப்பெண்ணை, ஹோட்டல் அறையில் மானபங்கம் செய்த மாப்பிள்ளைத் தோழருக்கு ஏழு ஆண்டுகள் சிறையும் 6 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்படவரின் அடையாளத்தைக் காக்கும் நோக்கில், குற்றம் புரிந்த 42 வயது ஆடவரின் பெயர் வெளியிடப்படவில்லை. அந்த நபர் மீது கடந்த மே மாதம் குற்றஞ்சாட்டப்பட்டது. சம்பவத்தைத் தொடர்ந்து, 11 ஆண்டுகளாகக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட தம்பதி, மணவிலக்கு கோரினர்.

2016ஆம் ஆண்டு திருமணம் புரிந்த தம்பதி, விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

அதன் பிறகு நடந்த ஒன்றுகூடலிலும் குற்றம் சாட்டப்பட்ட நபர் கலந்துகொண்டார். பின்னிரவு 1 மணிக்கு களைப்படைந்த மணப்பெண் அவரின் அறைக்குத் திரும்பினார்.

விருந்தினர் அனைவரும் வெளியேறிய நிலையில், குற்றம் புரிந்த ஆடவர் மட்டும் அறையில் இருந்த இருக்கையில் உறங்கினார். மாப்பிள்ளை இன்னோர் இருக்கையில் படுத்திருந்தார். அதிகாலை 6 மணிக்கு யாரோ தம்மைத் தொடுவதை மணப்பெண் உணர்ந்தார்.

அந்நபரின் முகத்தைச் சரியாகப் பார்க்க முடியவில்லை என்றாலும் அவர் தமது கணவர் இல்லை என்பதைப் பெண் அறிந்துகொண்டார். சம்பவத்தை அடுத்து, பொலிஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. சொந்த வீட்டில் உறங்கிக் கொண்டிருந்ததாகவும் தனது மனைவி என எண்ணி அவ்வாறு நடந்துகொண்டதாகவும் கூறி, நபர் குற்றச்சாட்டை மறுத்தார்.

ஆனால் வழக்கமாக மது அருந்திவிட்டுக் குளிக்கவில்லை என்றால் நபரை அவரின் மனைவி ஒன்றாக உறங்க அனுமதிப்பதில்லை என்பதை நீதிமன்றம் கண்டறிந்து, அவருக்கு தண்டனை விதித்தது. 

தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நபர் எண்ணியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

Read next: இஸ்ரேலில் முன்பதிவு செய்யும் பயனர்களை எச்சரிக்கும் Booking.com