சுயம்பு நரசிம்மர் கோயில்!

May 14, 2022 04:52 am

சம்பத்கிரியும் சப்தகிரியும் திருவண்ணாமலை மாவட்டம்  போளூரில் அமைந்துள்ள மலைகளாகும். செல்வம் அல்லது பொருள் என்பதன் வடமொழி வடிவம் சம்பத். கிரி என்றால் மலை. செல்வம்  இருக்கக்கூடிய மலை சம்பத்கிரி.

கலியுகம் காக்கவந்த தெய்வமாக நரசிம்மர் சுயம்புவாக எழுந்தருளி அருள் வழங்குவது போளூர் சுயம்பு நரசிம்மர் கோயிலாகும்.

செல்வமாகிய பொருள் குடி கொண்ட ஊர் பொருளூர் - போளூர் என மருவி வழங்குகிறது.

விஜய நகர மன்னர்களின் காலத்தில் இக்கோயில் புதுப்பித்துக் கட்டப்பட்டு, ருக்மணி சத்யபாமா உடனுறை வேணுகோபால சுவாமிக்கும், கனகவல்லித்தாயாருக்கு  தனி சந்நிதியும்   நிறுவப்பட்டது.

சக்கரத்தாழ்வார் சந்நிதியும், ஆஞ்சநேயர் கோயிலும் இங்குள்ளது.

மலையில் ஏறி சுயம்பு நரசிம்மரை தரிசிக்க 840 படிக்கட்டுகள் அமைத்தனர். ஏறத்தாழ 160 வருடங்களுக்கு முன்னர் சீனிவாச ராவ் என்பவரின் கனவில் பெருமாள் தோன்றி உத்தரவிட்டபடி, கோயிலுக்கு ஒரு பெரிய மணியை அவர் வாங்கி கொடுத்துள்ளார்.

புனித தீர்த்தம்: இம்மலையில் அன்னகுகை என்ற ஒரு குகை உள்ளது. இங்கே இரண்டு நீர்ச்சுனைகள் உள்ளன.

மலையின்மேல் பிரம்மா வழிபட்டு உருவாக்கிய  பிரம்ம தீர்த்தம் மற்றும் கீழே புலஸ்தியரால் உருவான  புலஸ்திய தீர்த்தம் ஆகியவை உள்ளன.  இப்போதும் பெளர்ணமி தினங்களில் நள்ளிரவில் பிரம்மா இங்கு வந்து நீராடி, நரசிம்மரை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம். 

இங்குள்ள குகையில், அரிதாஸ்கிரி ஞானானந்தகிரி சுவாமிகள், அச்சுதாசர், விட்டோபா, வெட்டவெளி சுவாமிகள் ஆகியோர் தவமிருந்ததாகவும், இன்றும் பல சித்தர்கள் உறைந்து வருகின்றனர்.  

பல பக்தர்கள் பிரதோஷ தினங்களில் பிரார்த்தனை செய்து கொண்டு, அபிஷேகம் செய்து பலன் பெறுகின்றனர். 

இதைத்தவிர சுவாதி நட்சத்திர நாளிலும், மாதப்பிறப்பு, ஏகாதசி, திருவோணம், புனர்பூசம், ரோகிணி, சப்தமி, பஞ்சமி பெளர்ணமி ஆகிய தினங்களிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன.

சித்திரை வருடப்பிறப்பு, சித்ரா பெளர்ணமியில் காரைப்பூண்டியில் தீர்த்தவாரி, வைகாசியில் வரதர் 10 நாள் உற்சவம், ஆவணியில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியில் ஸ்ரீவேணுகோபாலருக்கு சூரிய பூஜைகள் நடைபெறும். புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு அலங்கார வழிபாடுகள், ஐப்பசியில் கேதாரகெளரி விரத பூஜைகள் நடைபெறுகின்றன.

கார்த்திகையில் கண்விழித்தருள் செய்யும் நரசிம்ம மூலவர், மார்கழியில் மலை மீதிலிருந்து ஒருமாதம் கீழேவந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 

தொடர்ந்து, வைகுண்ட ஏகாதசி, கூடாரைவல்லி ஆகிய வைபவங்கள் முடிந்து தை 1-ஆம் தேதி மலைக்கு மீண்டும் எழுந்தருள்கிறார். 

போளூர், சம்பத்கிரி சுயம்பு நரசிம்மப் பெருமாள் பக்தர்கள் வேண்டும் அனைத்து பிரார்த்தனைகளுக்கும் செவிசாய்த்து பலன் தரும் இறைவனாக இங்கே தரிசிக்கலாம்.

அமைவிடம்: போளூர் பேருந்து நிலையத்திலிருந்து அரை கி.மீ. தொலைவிலேயே இத்திருத்தலம் அமைந்துள்ளது.  

இக்கோயிலில் வாரந்தோறும் சனிக்கிழமை உஷத் காலத்தில் அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் பூஜை நடைபெறும். மற்ற நாள்களில் உற்சவருக்கும், வேணுகோபாலருக்கும் பூஜைகள் நடைபெறுகின்றன.

பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகள் நிறைவேற, நித்ய பிரதோஷத்தில் மலையை தரிசித்து கீழே உற்சவரை வணங்குவதும், பானகம் நைவேத்தியம் செய்வதும் பழக்கத்தில் உள்ளது. 


Read next: 27 உயிர்களைப் பறித்த டெல்லி தீ விபத்து: