அவுஸ்திரேலியாவில் குழந்தைகளுடன் உயிரிழந்த இலங்கையர்! இறுதி வீடியோவில் பேசியது என்ன?

Jan 30, 2022 03:48 pm

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் தனது இரு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பல தகவல்கள் வெளியாகி உள்ளது.

அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பெர்த்தின் Huntingdaleல் வசித்து வந்தவர் இலங்கையரான இந்திக குணத்திலகா (40). இவருக்கு 6 வயதில் கோஹன் என்ற மகனும், 4 வயதில் லில்லி என்ற மகளும் இருந்தனர்.

குணத்திலகா தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார் என கூறப்படுகிறது. இந்நிலையில் இரு குழந்தைகளையும் அதன் தாயாரிடம் நேற்று மதியம் அழைத்து செல்லவிருந்தார் குணத்திலகா. ஆனால் அவர்களை அவர் அழைத்து செல்லவில்லை.

இதையடுத்து குழந்தைகளின் தாயார் இது தொடர்பில் பொலிசாருக்கு தகவல் அளித்த நிலையில் பொலிசார் குணத்திலக வீட்டிற்கு சென்றனர். 

அங்கு படுக்கையில் கோஹன் மற்றும் லில்லி சடலமாக கிடந்தனர். அதே போல குணத்திலகவின் சடலம் அருகே இருந்த கொட்டிலில் கண்டுபிடிக்கப்பட்டது.

குணத்திலகா சில காலமாகவே மன உளைச்சல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தார். அது தொடர்பில் அவர் சில வாரங்களுக்கு முன்னர் 18 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். 

மேலும் அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவுகளை பார்க்கும் போது ஒருவித மன அழுத்தத்தில் இருந்தார் என்றே தெரிகிறது.

குணத்திலகாவின் ஒரு பதிவில், எல்லா குழந்தைகளை பாதுகாக்க வேண்டும், அது உங்களுடையதாக இல்லாவிட்டாலும் கூட என ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். 

மற்றொரு பதிவில், கோபப்படுவது சரிதான், ஆனால் கொடூரமாக இருப்பது சரி கிடையாது என பதிவிட்டுள்ளார்.

குணத்திலகா வெளியிட்ட வீடியோவில், நான் மனச்சோர்வில் உள்ளேன், நீண்ட காலமாக என்னை நன்கு அறிந்தவர்கள் என்னை மனச்சோர்வில் உள்ள ஒருவராக நினைக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக உணர்கிறேன்.

நான் இதை சொல்ல வெட்கப்படவில்லை. தற்கொலை என்பது தீர்வாகாது, மற்றவர்களை அணுகி பேசுங்கள் என கூறியுள்ளார். 

இதனிடையில் இந்த மரணத்திற்கான சரியான காரணம் மற்றும் சூழ்நிலைகள் முழுமையாக ஆராயப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Read next: கொவிட் தொற்றை குறைக்கும் சீனாவின் மற்றுமொரு கடுமையான நடவடிக்கை