உலகளவில் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையில் கடும் சரிவு - மனித குலத்திற்கு ஆபத்து

Nov 16, 2022 04:03 am

உலக அளவில் கடந்த சில ஆண்டுகளாக ஆண்களின் விந்தணு எண்ணிக்கையில் கடுமையான சரிவு ஏற்பட்டு வருவதாக சர்வதேச ஆய்வு முடிவில் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு தீர்வு காணாவிட்டால், மனித குலத்திற்கு ஆபத்தாகும் எனவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ஆண்களின் விந்தணு எண்ணிக்கை மற்றும் அதன் செறிவு தொடர்பான சர்வதேச ஆய்வு முடிவு Human Reproduction Update என்ற மருத்துவ இதழில் வெளியானது. 

இந்த ஆய்வு 53 நாடுகளில், 57,000 ஆண்களிடம் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலின் ஹீப்ரூ பல்கலைக்கழகத்தின் ஹடாசா பிரான் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் பேராசிரியர் ஹகாய் லெவின் தலைமையில் நடந்த இந்த ஆய்வில் டென்மார்க், பிரேசில், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வை நடத்தி உள்ளனர்.

இவர்கள் முதல் முறையாக தென் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்ரிக்காவில் உள்ள ஆண்களின் விந்தணுக்களை மதிப்பாய்வு செய்துள்ளனர்.

இதில், இந்தியா உட்பட உலகம் முழுவதும் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையும், விந்தணுக்களின் செறிவும் மிகப்பெரிய சரிவை கண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 50 ஆண்டுகளில் விந்தணுக்களின் எண்ணிக்கையில் 50 சதவீதம் குறைந்துள்ளது. குறிப்பாக, கடந்த 20 ஆண்டுகளில் சரிவு எண்ணிக்கை இரண்டு மடங்காக இருந்துள்ளது. 

அதாவது, 1973 முதல் 2018ம் ஆண்டு வரை விந்தணுக்களின் எண்ணிக்கை சராசரியாக 1.2 சதவீதம் குறைந்துள்ளது.

இதுவே 2000ம் ஆண்டுக்குப் பின் ஆண்டிற்கு 2.6 சதவீதத்திற்கும் அதிகமான வீழ்ச்சியை கண்டுள்ளது. இதை நம்பவே முடியவில்லை எனக்கூறி உள்ள பேராசிரியர் லெவின், தொற்றுநோயைப் போல உலகம் முழுவதும் விந்தணு எண்ணிக்கை சரிவு பரவியிருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார். 

விந்தணுக்கள் எண்ணிக்கை சரிவிற்கான காரணம் இந்த ஆய்வில் ஆராயப்படவில்லை என்றாலும், கருவில் இருக்கும் போதே இனப்பெருக்க மண்டலத்தின் வளர்ச்சியில் ஏற்படும் இடையூறுகள் முக்கிய காரணியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. 


Read next: இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காக அறிமுகமாகிய தொலைபேசி இலக்கம்!