சிங்கப்பூரில் பாடசாலை ஒன்றில் பதற்றம்! இரத்த வெள்ளத்தில் கிடந்த 13 வயது மாணவன்

Jul 21, 2021 08:28 am

சிங்கப்பூரில் பாடசாலை ஒன்றில் மாணவன் ஒருவன் சக மாணவனால் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அந்த நாட்டை அதிர வைத்துள்ளது.

சிங்கப்பூரில்  ரிவர் வேலி பாடசாலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தன. 

அப்போது மாணவர்கள் சிலர் பாடசாலையிலுள்ள கழிவறைக்கு சென்றபோது அங்கு சக மாணவன் ஒருவன் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ந்து போயினர். 

இதுபற்றி அவர்கள் ஆசிரியர்களிடம் தகவல் தெரிவிக்க, அவர்கள் உடனடியாக பொலிஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். 

மேலும் மாணவனின் உடலுக்கு அருகே கிடந்த இரத்தம் படிந்த கோடாரியை கைப்பற்றி பொலிஸார் விசாரணை நடத்தினர்.

அதில் கொலை செய்யப்பட்ட அந்த மாணவன் 13 வயது சிறுவன் என்பதும், அதே பாடசாலையில் படிக்கும் 16 வயதுச் சிறுவன் அவனை கோடாரியால் வெட்டி கொடூரமாக கொலை செய்ததும் தெரியவந்தது. 

இதையடுத்து பொலிஸார் அந்த 16 வயது சிறுவன் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

மாணவனின் இந்த வெறி செயலுக்கான காரணம் குறித்து பொலிஸார் அவனிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read next: மல்லாகம் நீதிமன்றுக்கு வழக்கு ஒன்றுக்கு வருகை தந்தவரின் மோட்டார் சைக்கிளைத் திருடியவர் கைது !