கோட்டாபயவை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோரிக்கை!

Aug 22, 2022 12:12 pm

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் இனப்படுகொலைக்கு காரணமானவர் என்ற ரீதியில் இந்த நடவடிக்கை எடுக்குமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி திருமதி லீலாதேவி ஆனந்தன் நடராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு மகஜர் ஒன்றை அனுப்ப தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள சிவில் அமைப்புகள், அரசியல் கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், அந்தக் கட்சிகளும் இந்த கையெழுத்துப் பத்திரத்தில் கையெழுத்திடவுள்ளதாகவும் திருமதி நடராஜா தெரிவித்துள்ளார் .

இந்த மகஜர் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் கையொப்பமிட்டு ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுகள், அரசியல் கைதிகளை விடுவித்தல், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நில ஆக்கிரமிப்புகளை நிறுத்துதல் போன்ற கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் அடங்கிய மற்றுமொரு மகஜர் ஒன்றும் இந்த மகஜருடன் அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read next: 3 மாதங்களில் 2-வது முறையாக சந்திப்பு