காணாமல் போன பேராதனை பல்கலைக்கழக மாணவரின் சடலம் மீட்பு?

Sep 21, 2022 05:37 pm

பேராதனை பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டில் கல்வி பயின்ற அஞ்சன குலதுங்க என்ற மாணவனுடையது என கருதப்படும் உடலம் ஒன்று இன்று மாலை மஹாவளி கங்கைக் கரையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 16 ஆம் திகதி காணாமல் போன மாணவனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

பேராதனை பல்கலைக்கழகத்திலிருந்து 2 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கண்ணொருவ பகுதியிலேயே உடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 16 ஆம் திகதி குறித்த மாணவர் காணாமல் போனதாக பேராதனை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக அவரைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

காணாமல் போனவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் மனோதத்துவ துறையில் பயின்று வந்த மாணவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்தது.

குறித்த மாணவர் எழுதியதாக சந்தேகிக்கப்படும் கடிதம் ஒன்றும் அவர் தங்கியிருந்த அறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போனவர் கம்பஹா - யக்கல பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட 24 வயது மதிக்கத் தக்க மாணவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட உடலம் காணாமல் போன மாணவருடையதா என்று உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பேராதனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read next: 2008-க்குப் பிறகு பேச்சுவார்த்தை நடத்திய இஸ்ரேல் மற்றும் துருக்கிய தலைவர்கள்