மொஸாம்பிக்கில் இஸ்லாமிய தீவிரவாதிகள் 50 பேரின் தலையைத் துண்டித்து கொலை-மொஸாம்பிக் அரசு

2 weeks

மொஸாம்பிக்கின் வட பிராந்தியத்தில் 50 க்கும் அதிகமான பொதுமக்கள் தலைதுண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்லாமிய தீவிரவாதக்குழு ஒன்றினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் குறித்த பிராந்தியத்தில் உள்ள கால்பந்தாட்ட விளையாட்டு மைதானத்தை மரண தண்டனை நிறைவேற்றும் தளமாக மாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தீவிரவாதக்குழுவின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முற்பட்டவர்களே சிறைப்பிடிக்கப்பட்டு பின்னர் கால்பந்தாட்ட மைதானத்துக்கு அழைத்துவரப்பட்டு மிக மோசமாக கழுத்து வெட்டி கொல்லப்பட்டுள்ளனர்.

மொஸாம்பிக்கின் வேறு சில பகுதிகளிலும் இதுபோன்று தலைதுண்டிக்கப்பட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மேலும் செய்திகள் கூறுகின்றன.

.எஸ். இஸ்லாமிய பயங்கரவாத குழுவுடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு அமைப்பாக குறித்த இஸ்லாமிய தீவிரவாதக்குழு மொஸாம்பிக்கில் செயற்பட்டுவருகின்றது.

இஸ்லாமிய தீவிரவாதக்குழுவின் மோதல்கள் காரணமாக மொஸாம்பிக்கின் கபோ டெல்கடோ மாகாணத்தில் இதுவரை 2000 க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் சுமார் 430000 பேர் தமது குடியிருப்புக்களை இழந்து நிர்க்கதியாகியுள்ளனர்.

மொஸாம்பிக்கின் குறித்த பிராந்தியத்தில் இஸ்லாமிய ஆட்சியை ஸ்தாபிக்கும் நோக்கில் இளைஞர்கள் மத்தியில் காணப்படும் வேலையின்மை வறுமை போன்றவற்றை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் குறித்த இஸ்லாமிய தீவிரவாதக்குழு அவர்களை தங்களது ஆயுதக்குழுவுடன் இணைத்துவருகின்றது.

தொடர்ச்சியாக இஸ்லாமிய தீவிரவாதக்குழுவால் நடத்தப்பட்டுவரும் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு முழுமையான சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அப்பிராந்திய மக்கள் கோரிவருகின்றனர்.

குறித்த இஸ்லாமிய தீவிரவாதக்குழுவின் தாக்குதல்களை தடுக்க சர்வதேச சமூகம் தமக்கு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்று மொஸாம்பிக் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துவருகின்றது.

இதேவேளை மொஸாம்பிக்கின் அரச படையினரும் சித்திரவதைகள் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை மீறல்களை மேற்கொண்டுவருவதாக மனித உரிமைகளுக்கான அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

 

Read next: கோவிட் தடுப்பு மருந்து கொரோனா தொற்றின் பாதிப்பை முன்றிலுமாக மாற்றக்கூடும்