தொடர்ந்து பெய்த மழை... சொதப்பிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் நாள் ஆட்டம்

Jun 18, 2021 08:40 pm

சௌதாம்ப்டன் : பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முதல் நாளிலேயே ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பட்டு இன்றைய தினம் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆடவிருந்த நிலையில் இதுவரை டாஸ் கூட போடமுடியாத அளவுக்கு நிலைமை உள்ளது.


சவுத்தாம்ப்டனில் இரவு முதல் மழை பெய்து வருகிறது. காலையில் கனமழை இல்லையென்றாலும், 8 மணி முதல் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், எப்படியும் மீண்டும் போட்டியை தொடங்கலாம் என்று அதிகாரிகள் கணித்தனர். ஆனால், நசநசவென பெய்துக் கொண்டிருக்கும் சாரல் மழை விடுவதாய் இல்லை.

இந்த சூழலில், தான் தொடர் சாரல் மழை காரணமாக, முதல் நாள் ஆட்டத்தின் முதல் செஷன் நடத்தப்படாது என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பிற்பகல் மூன்று மணி நிலவரப்படி, பலத்த மழை பெய்யவில்லை. ஆனால், தொடர்ந்து சாரல் மழை நீடித்தது. இது இப்படியே தொடரும் பட்சத்தில், இன்றைய முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்படலாம்.

அதேபோல், இன்று முதல் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரையிலான ஆட்டம் முழுவதும் நடத்தப்படாது என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கடந்த முறை இந்திய கிரிக்கெட் வாரியம் அப்டேட் கொடுக்க, இம்முறை நியூசிலாந்து வாரியம் அப்டேட் கொடுத்திருக்கிறது.

இந்நிலையில், திடீர் திருப்பமாக இந்திய நேரப்படி, மாலை 4:45 மணிக்கு சவுத்தாம்ப்டனில் மழை முற்றிலும் நின்றது. அதாவது, உள்ளூர் நேரப்படி, சரியாக 12:15 மணிக்கு மழை நின்றது. இதனால், ஆட்டத்தை தொடங்கும் முயற்சியாக க்ளீனிங் பணிகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டனர். மைதானத்தில் கடுமையான ஈரப்பதம் இருந்ததால், குறைந்தபட்சம் 2 மணி நேரத்தில் அனைத்தையும் க்ளீயர் செய்யும் பணிகள் தொடங்கின.

ஆனால், அடுத்த ஆறே நிமிடத்தில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கிவிட்டது. அதுவும் வழக்கமான அதே சாரல் மழை தான். இதனால், கடுப்பான அதிகாரிகள் பணிகளை அப்படியே நிறுத்திவிட்டு மைதானத்தை விட்டு வெளியேறினர். காலையில் இருந்து இப்போது தான் மழை முழுமையாக நின்றது. ஆனால், அதற்குள் மீண்டும் மழை பெய்யத் தொடங்க, அப்படியே அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

Read next: பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு மருந்து தொடர்பான தரவுகள்