மஹிந்தவின் காலம் முடிந்துவிட்டது - கைவிட்ட பிரபலங்கள்

Jan 25, 2023 01:17 am

இலங்கையில் இதுவரை காலமும் மஹிந்தவின் நிழலில் நாம் வெற்றி பெறவில்லை என புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். 

மஹிந்தவுக்குத்தான் நாம் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தோம். இனிமேல் மஹிந்தவுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 

“2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெல்ல முடியாத நிலையில் இருந்தார் மஹிந்த ராஜபக்ச. அப்போது ஜாதிக ஹெல உறுமயவில் இருந்த நாங்கள் மஹிந்தவுடன் இணைந்து கடுமையாக உழைத்தோம். 50.1 என்ற வீதத்தில் மயிரிழையில் மஹிந்தவை வெல்ல வைத்தோம்.

அவர் விடுதலைப்புலிகளுடன் போர் செய்ய நினைக்கவில்லை. சமாதானப் பேச்சு நடத்தவே இருந்தார். ‘நான் வன்னிக் காட்டுக்குச் சென்று பிரபாகரனுடன் நேருக்கு நேர் பேச்சு நடத்துவேன் என்று ‘மஹிந்த சிந்தனையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

நாமே அவரைப் போரை நோக்கித் தள்ளினோம். போருக்கு ஆதரவான மக்கள் நிலைப்பாட்டை உருவாக்கினோம். போரின் வெற்றியை நோக்கி அவரை வழிநடத்தினோம். அவரை ஜனாதிபதியாக்கியதும் நாமே. போரை வெல்ல வைத்ததும் நாமே.

போரை வென்ற பிறகுதான் தேர்தல் கேட்டோம். இல்லாத மஹிந்தவை உருவாக்கி அவருக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்த பின்பே தேர்தல் கேட்டோம். ஆகையால், மஹிந்தவின் நிழலில் நாம் வெற்றி பெறவில்லை. மஹிந்தவுக்குத்தான் நாம் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தோம்” – எனவும் கம்மன்பில குறிப்பிட்டார்.

Read next: பிரான்ஸில் 80,600 யூரோ கடிகாரத்தை திருடியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!