பிரான்ஸ் ஜனாதிபதி உள்ளிட்ட ஐம்பதாயிரம் பேரின் தொலைபேசி வேவுபார்க்கப்பட்டதாக சந்தேகம்

Jul 22, 2021 05:43 am

இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ நிறுவனம்  சுமார் ஐம்பதாயிரம் பேரின் தொலைபேசி எண்களைக் கண்காணிப்பதாகத் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் மற்றும் அவருடைய உயர் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் கசிந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கைத்தொலைபேசிகளில் ரகசியமாக நிறுவும் வசதியுள்ள நச்சு மென்பொருளை அந்த நிறுவனம் உருவாக்கி வருகிறது.

உலகம் முழுவதும் உள்ள அரசியல்வாதிகள், செய்தியாளர்கள், ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. எனவே, தனிநபர் தகவல் பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது.

தொலைபேசி எண் கசிந்திருப்பதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு உண்மை என்றால் அது மிகக் கடுமையானது என்று மக்ரோனின் அலுவலகம் தெரிவித்துள்ளது. அது பற்றி அதிகாரிகள் புலனாய்வு நடத்துவர் என்று கூறப்பட்டது.

பயங்கரவாதம், குற்றச்செயல்கள் ஆகியவற்றை முறியடிக்கப் போராடும் சட்ட அமுலாக்கல் அமைப்புகள், சட்டத்துக்குட்பட்ட முறையில் தங்கள் மென்பொருளைப் பயன்படுத்துவதாக என்.எஸ்.ஓ நிறுவனம் கூறி வருகிறது.  

பிரான்ஸ் ஜனாதிபதியின் கைபேசியில் குறித்த மென்பொருள் நிறுவப்பட்டது தொடர்பில் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. 

கசிந்துள்ள தொலைபேசி இலக்கங்களில் ஈராக் ஜனாதிபதி பராம் சாலிஹ் மற்றும் தென்னாபிரிக்காவின் சிறில் ரமபோசா, அதேபோன்று பாகிஸ்தான், எகிப்தின் தற்போதைய தலைவர்கள் மற்றும் மொரோக்கோ மன்னரின் தொலைபேசி இலக்கங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் பட்டியலில் 34 நாடுகளில் 600க்கும் அதிகமான அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளனர்.

Read next: ஆர்.எஸ்.எஸ் தலைவருக்காக சாலையை சீரமைக்க உத்தரவு !