எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் திடீர் ரெய்டு!

Jul 22, 2021 06:11 am

முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு திமுகவின் செந்தில் பாலாஜியிடம் தோல்வி அடைந்தார்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், வருமானத்துக்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பதாகவும் வந்த புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி கரூர் மற்றும் சென்னையில் உள்ள அவரின் வீடு, நிறுவனங்கள் மற்றும் உறவினர்களின் வீடுகள் என மொத்தமாக 21 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதில் 20 இடங்கள் கரூரில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எண்-05- சாய் கிருபா அப்பார்ட்மெண்ட்டில் வசிக்கும் முன்னாள் போக்குவரத்துதுறை அமைச்சர் M.R.விஜய பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை DSP ராமச்சந்திரன் தலைமையில் மூன்று யூனிட்கள் ரெய்டு நடத்தி வருகின்றனர். சோதனை நடைபெறும் நிலையில் அவர் சென்னையில் இருப்பதாக கூறப்படுகிறது.

லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதால் கரூர் ஆண்டான்கோயில் பகுதியில் உள்ள அவரது வீட்டில் 20க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வரும் தகவல் அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

Read next: தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு இடம்பெறவில்லை !