இலங்கை மெய்வல்லுநர்களின் கஸகஸ்தான் சுற்றுப்பயணம் இரத்து

Jun 20, 2021 03:21 am

வீசா பெற்றுக்கொள்வதில் தொடர்ந்து இழுபறி நிலை ஏற்பட்டதால் கஸகஸ்தான் திறந்த மெய்வல்லுநர் தொடரில் இருந்து விலகிக்கொள்ள இலங்கை மெய்வல்லுனர் தீர்மானித்துள்ளது.

கஸகஸ்தானின் அல்மாட்டில் இம்மாதம் 19ஆம், 20ஆம் ஆகிய தினங்களில் திறந்த மெய்வல்லுநர் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது.

இம்முறை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான கடைசி தகுதிகாண் போட்டிகளில் ஒன்றாக அமைந்த இந்தப் போட்டித் தொடருக்காக இலங்கையிலிருந்து நிமாலி லியனஆராச்சி, நதீஷா ராமநாயக்க, காலிங்க குமாரகே மற்றும் சுமேத ரணசிங்க உள்ளிட்ட வீரர்களை பங்குபெறச் செய்ய இலங்கை மெய்வல்லுநர் சங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

எனினும், தெற்காசிய நாடுகளில் தற்போது வேகமாக பரவிவருகின்ற கொரோனா வைரஸ் காரணமாக கஸகஸ்தானின் குடிவரவு – குடியகல்வு திணைக்களம் குறித்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வீசா வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

இதனால் இலங்கை மெய்வல்லுநர்களின் கஸகஸ்தான் சுற்றுப்பயணத்தை இரத்து செய்வதற்கு இலங்கை மெய்வல்லுநர் சங்கம் தீர்மானித்துள்ளது. இதனிடையே, கஸகஸ்தான் சுற்றுப்பயணத்துக்காக தெரிவுசெய்யப்பட்ட வீரர்கள் அனைவரையும் முழு ஆயத்தங்களுடன் கொழும்பில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கவைப்பதற்கு மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிபெறுவதற்கான மற்றுமொரு போட்டியாக இம்மாதம் 25ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், படியலா நகரில் இந்திய மாநில மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடர் நடைபெறவுள்ளது.

இதில் இந்திய மெய்வல்லுநர் சங்கத்தினால் கிடைக்கப்பெற்ற அழைப்பிற்கு அமைய 16 வீரர்களைக் கொண்ட இலங்கை அணியொன்றை அனுப்புவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்ற காரணத்தால் இந்த சுற்றுப்பயணத்துக்கு தேசிய விளையாட்டுப் பேரவை இதுவரை அனுமதி வழங்கவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது.

இலங்கை மெய்வல்லுனர்களுக்கு கடைசி வாய்ப்பாக அமைந்துள்ள இந்த சுற்றுப்பயணமும் இடம்பெறுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read next: உலகின் முதலாவது 5G SA ஒத்திசையும் eSIM இனை வெளியிடும் OPPO