ஜெஃப் பெசோஸ் விண்வெளிக்கு பயணம் !

Jul 21, 2021 08:01 am

விண்வெளிக்கு பயணம் மேற்கொண்ட உலக பணக்காரர்களில் ஒருவரான அமேசன் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ் வானில் மிதக்கும் விடியோவை தனது

சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த பெரும் பணக்காரர் ரிச்சர்ட் பிரான்சன் சமீபத்தில் தனது குழுவினருடன் சொந்த விண்வெளி விமானத்தில் விண்வெளிக்கு வெற்றிகரமாக பயணம் மேற்கொண்டார்.

அவரைத் தொடர்ந்து, அமேசான் நிறுவன நிறுவனரும், உலகின் ‘நம்பர் 1 பணக்காரருமான ஜெப் பெசோஸ், நேற்று தனது புளூ ஆரிஜின் விண்வெளி நிறுவன விண்கலம் மூலம் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டார்.

அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ் மாகாணத்தின் தொலைதூர பகுதியில் உள்ள ஒரு இடத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 9.15 மணிக்கு ‘நியூ ஷெப்பர்டு விண்கலம் விண்ணில் பாய்ந்தது.

விண்வெளி வீரர்களுடன், செலுத்துனர் இல்லாமல் தானியங்கி முறையில் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்ட முதல் விண்கலம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெப் பெசோசுடன், அவரது சகோதரர் மார்க் பெசோஸ், 1960-களில் விண்வெளி பயண பயிற்சி பெற்ற 82 வயதான வீராங்கனை மேரி வாலஸ் பங்க், நெதர்லாந்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஆலிவர் டேமென் ஆகியோரும் விண்வெளிக்கு பயணித்தார்கள்.

சுமார் 100 கி.மீ. தூரத்துக்கு விண்ணில் உயர்ந்த அவர்கள், விண்வெளியில் சில நிமிடங்கள் எடையற்ற நிலையை உணர்ந்தார்கள். ஜெப் பெசோஸ் குழுவினரை விண்வெளிக்கு அனுப்பிய ராக்கெட் முதலில் ஏவுதளத்துக்கு திரும்பியது. அதைத் தொடர்ந்து, பெசோஸ் உள்ளிட்ட நால்வரும் இருந்த, பாரசூட்டுடன் இணைக்கப்பட்ட ‘கேப்சூல், டெக்சாஸ் பாலைவனத்தில் பத்திரமாக தரையிறங்கியது. மொத்தம் 10 நிமிடங்கள், 20 வினாடிகளில் இந்த விண்வெளி பயணம் நிறைவு பெற்றது.

இதன் மூலம், விண்வெளிக்கு பயணம் செய்த மிக வயதானவர் என்ற பெருமையை வாலஸ் பங்கும், மிக இளவயது நபர் என்ற புகழை ஆலிவர் டேமெனும் பெற்றுள்ளார்கள். விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்து பூமி திரும்பிய ஜெப் பெசோஸ் உள்ளிட்டோருக்கு, விண்வெளி சுற்றுலாவில் அவரது போட்டியாளரும், சமீபத்தில் விண்வெளி சென்று திரும்பியவருமான ரிச்சர்ட் பிரான்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சனுடன் இந்திய பெண் ஸ்ரீஷா பந்தலா விண்வெளிக்கு பறந்ததைப் போல, ஜெப் பெசோசின் இந்த விண்வெளி பயணத் திட்டத்தில், மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சல் கவாண்டே இணைந்து பணிபுரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Read next: இந்தியாவிற்கு உளவுத்துறை எச்சரிக்கை !