நியூசிலாந்தில் தாக்குதல் நடத்தியவருக்கும் இலங்கை தீவிரவாத தாக்குதலுக்கும் தொடர்பா?

Sep 07, 2021 07:37 am

நியூசிலாந்து சுப்பர் மார்க்கட்டில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய காத்தான்குடியைச் சேர்ந்த மொஹம்மட் சம்சுதீன் அஹமட் ஆதில் தொடர்பில் CID மற்றும் SIS விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் பிரசாத் ரணசிங்கவின் நேரடிக் கட்டுப்பாட்டில்,

CIDபணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் பிரேமரத்னவின் ஆலோசனையின் கீழ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கீழ் நடைபெறும் விசாரணைகளில், பல கோணங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

குறிப்பாக, ஆதில் 2011 ஆம் ஆண்டு முதல் நியூஸிலாந்தில் வசித்தபோதும் 2016 ஆம் ஆண்டிலிருந்தே பயங்கரவாத அல்லது அடிப்படைவாத செயற்பாடுகள், 

அதற்கான ஆதரவுகளை வழங்கும் ஒருவராக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அக்காலப் பகுதியிலிருந்து ஆதிலுடன் தொடர்பிலிருந்த இலங்கையர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, அவரின் முகநூல் ஊடாக அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் தொடர்பில் ஆராயும் CIDயின் சிறப்பு விசாரணைக்குழு, 2019 ஏபரல் 21 ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பிலான விடயத்துடனும் ஒப்பீடு செய்து விசாரித்து வருகிறது.

அதன்படி காத்தான்குடிக்குச் சென்ற சிறப்பு விசாரணையாளர்கள் ஆதிலின் தாயாரிடம் மிக நீண்ட வாக்குமூலங்களை பதிவு செய்துள்ள நிலையில் மேலும் சிலரிடமும் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர். 

அதில் ஆதிலுக்கு நெருக்கமான சிலர் அடங்குவதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.


Read next: அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் தயாரித்த முதலாவது சேலைன் தொகை!