இலங்கையில் பேஸ்புக் பயனாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை - கைது செய்யப்படலாம்

Jan 27, 2023 01:15 am

இலங்கையில் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பேஸ்புக்கில் அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட நபர் ஒருவர் மஹரகமவில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் கணினி குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.

40 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்து பொதுமக்களுக்கு அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் நபர் ஒருவர் தனது பேஸ்புக்கில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டதாக வந்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கணினி குற்றப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேக நபர் பல்வேறு வகைகளில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான மேற்படி கருத்துகளை தயாரித்து தனது பேஸ்புக்கில் சேர்த்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி, அவ்வாறான கருத்துக்களை தெரிவித்த சந்தேகநபரின் முகநூல் கணக்கை சோதனை செய்து விரிவான அறிக்கையை பெற்றுக்கொண்டதன் பின்னர், மஹரகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் நுகேகொட கங்கொடவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Read next: சிங்கப்பூர் மக்களுக்காக அமுலாகும் நடைமுறை!