வேலை இழந்தவர்களுக்கு அமெரிக்கா விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Jan 24, 2023 07:01 pm

H-1B விசா நிபந்தனையின்படி, வேலை இழந்தவர்கள் 60 நாட்களுக்குள் புதிய நிறுவனத்தில் பணியில் சேர வேண்டும்.அவ்வாறு இல்லாதபட்சத்தில் அமெரிக்காவை விட்டு அவர்கள் வெளியேற வேண்டும்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிபவர்களைக் கொத்துக்கொத்தாக வேலைநீக்கும் படலம் அரங்கேறி வருகிறது. அமேசான், கூகுள், மெட்டா, மைக்ரோசாப்ட் என பெருநிறுவனங்கள் தொடங்கி சிறிய நிறுவனங்கள் வரை ஏராளமான தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வெளியேற்றி வருகின்றனர். 

அமெரிக்காவில் மட்டும் கடந்த நவம்பர் முதல் தற்போது வரை சுமார் 2 லட்சம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 30-40 சதவிகிதம் வரை இந்தியர்கள் ஆவார்.வேலையை இழந்துள்ள இந்தியர்கள் அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் கடும் பரிதவிப்பில் உள்ளனர். அவர்கள் புதிய வேலைக்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

ஆனால், பல்வேறு நிறுவனங்களில் ஒரே நேரத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் வேலையிழந்தவர்களுக்கு புதிய வேலை கிடைப்பதில் சிக்கல் எழுந்திருக்கிறது. இவர்கள் வாட்ஸ்அப் செயலியில் தனி குரூப் உருவாக்கி, எங்கெங்கு வேலைவாய்ப்புகள் உள்ளன என்ற தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.

அமெரிக்காவில் வேலை செய்யும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு H-1B விசா வழங்கப்படுகிறது. இந்த விசா நிபந்தனையின்படி, வேலை இழந்தவர் மற்றும் வேறு வேலை அல்லது வேறு நிறுவனத்திற்கு மாறுபவர், 60 நாட்களுக்குள் புதிய நிறுவனத்தில் பணியில் சேர வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் அமெரிக்காவை விட்டு அவர்கள் வெளியேற வேண்டும். 

தற்போதைய நிலவரப்படி 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மென்பொருள் வல்லுனர்கள் அமெரிக்காவில் வேலை இழந்துள்ளனர். கணிசமான அளவில் பணிநீக்கம் நடந்துள்ளதால் விசா கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கும்படி அமெரிக்க வாழ் இந்தியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

Read next: நாட்டின் வேலைவாய்ப்பு முகமைகள் பற்றிய கடினமான முடிவு