உட்கார்ந்தே வேலை செய்யும் கட்டாயம்.... உடல்நலக் குறைபாடுகளில் இருந்து தப்பிப்பது எப்படி?

Jun 14, 2021 04:58 pm

சென்னை : மாறிவரும் வாழ்க்கை சூழலில் 90 சதவிகித இளைஞர்கள் கணினியை மையமாக கொண்ட வேலைகளிலேயே தங்களை அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். எந்த துறையை எடுத்தாலும் அதில் கணினி இல்லாமல் வேலை நடப்பதில்லை. இதனால் உடல் உழைப்பு இல்லாமல் உட்கார்ந்தபடியே 9 முதல் 12 மணிநேரங்களை ஒரு நாளில் செலவிடும் நிலைமை உள்ளது.

அந்த காலத்தில் உடல் உழைப்புக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. எந்த வேலையானாலும் உடல் உழைப்பை மையமாக கொண்டே இருந்தது. இதனால் அதிக கலோரிகள் கொண்ட உணவை சாப்பிட்டாலும் அது எளிதில் ஜீரணமானது. ஆனால் தற்போதைய நிலைமையே வேறு.

உட்கார்ந்தே வேலை செய்வதால் சாப்பிடும் உணவுகள் எளிதில் செரிப்பதில்லை. மாறாக தற்போது அதிகமான ஜங்க் உணவுகளையும் இளைய தலைமுறையினர் எடுத்து வருவதால் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இதனால் நோய்நொடிகளையும் இளைய தலைமுறை அதிகமாக எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

தொடர்ந்து 3 ஆண்டுகள் உட்கார்ந்த நிலையிலேயே வேலை செய்வதால் மாரடைப்பு, நீரிழிவு போன்ற பல்வேறு வியாதிகள் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளது. இவற்றிலிருந்தெல்லாம் நாம் கண்டிப்பாக வெளியில் வரலாம். ஆனால் ஒரு சில மெனக்கெடல்கள் மட்டுமே தேவை.

இதற்கு முக்கியமாகவும் முதன்மையாகவும் செய்ய வேண்டியது உடற்பயிற்சி மட்டுமே. தினமும் குறைந்தபட்சம் அரைமணிநேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் நடைபயிற்சி செய்யலாம்.

வியர்க்க விறுவிறுக்க வேகமான நடை நல்ல பலனை கொடுக்கும். இதேபோல கணினி முன்பு உட்கார்ந்து தொடர்ந்து வேலை செய்யாமல் அவ்வப்போது எழுந்து சிறிய உடற்பயிற்சிகள், மூச்சுப்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். சூரிய நமஸ்காரம் செய்யலாம்.

குறைந்தபட்சம் யோகா, தியானம் போன்றவற்றையும் மேற்கொள்ளலாம். இவையெல்லாம் சிறப்பான பலனை கொடுக்கும். எண்ணெய் பலகாரங்களை அதிகமாக எடுப்பதை தவிர்த்து, பழங்கள் காய்கறிகளை அதிகமாக எடுப்பதும் சிறப்பான பலனை அளிக்கும். இதன்மூலம் நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

Read next: பிளாஸ்டிக் போத்தல்களைத் தடை செய்வது நடைமுறைக்கு சாத்தியமற்றது