கொரோனா கட்டுப்பாடுகளால் உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

1 week

கொரோனா வைரஸின் தொற்றுப்பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டுவரும் முடக்கநிலை காரணமாக உயர்குருதி அமுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தனிமைப்படுத்தல் காரணமாக வீடுகளில் மக்கள் முடங்கியிருந்தமையால் ஏற்பட்ட மனஅழுத்தமே உயர்குருதி அமுக்கம் ஏற்பட வழிவகுத்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆர்ஜென்டீனாவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 1643 நோயாளர்களிடத்தில் நிகழ்த்தப்பட்ட குறித்த ஆய்வில் 37 வீதமானவர்களுக்கு உயர்குருதி அமுக்கம் ஏற்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் முடக்கநிலை அறிவிக்கப்பட்டதிலிருந்து  முதல் மூன்று மாதங்களில் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களில் 23.8 வீதமானவர்களுக்கு உயர்குருதி அமுக்கம் ஏற்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் உயர்குருதியமுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமானளவில் அதிகரித்துள்ளமை புலப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமூகரீதியான தனிமைப்படுத்தலுக்கும் உயர் குருதியமுக்கத்துக்கும் இடையில் சாத்தியமான தொடர்புகள் இருக்கின்றமை குறித்த ஆய்வின் மூலம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்காரணமாக மட்டுப்படுத்தப்பட்டவர்களுடனான தொடர்புகள், நிதி நெருக்கடிகள், குடும்ப ரீதியிலான சிக்கல்கள் காரணமாக மனஅழுத்தம் அதிகரிப்பதால் உயர்குருதி அமுக்கம் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முடக்கநிலை காரணமாக மக்களின் வாழ்வியலில் ஏற்பட்ட மாற்றங்கள், உணவு பழக்கவழக்கங்கள் எடையதிகரிப்பு போன்றன குருதியமுக்கத்தில் முக்கிய பங்கினை வகிக்கின்றன.

ஐக்கிய இராச்சியத்தில் வயதுவந்த 5 பேரில் ஒருவருக்கு உயர்குருதியமுக்கம் காணப்படுவதுடன் இதற்கு பிரதானமாக மனஅழுத்தம், புகைத்தல், மோசமான உணவு பழக்கவழக்கங்கள் போன்றன காணப்படுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இவ்வாறான பாதிப்புக்களை எதிர்நோக்குகின்றவர்களுக்கு வாதம், மாரடைப்பு, சிறுநீரக பாதிப்புக்கள் உள்ளிட்ட தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமுள்ளன.

எனினும் கொவிட் 19 வைரஸ் தாக்கத்தால் உயர்குருதியமுக்கம் ஏற்படுமா என்பது தொடர்பில் குறித்த ஆய்வில் ஆராயப்படவில்லை என்பது குறிப்பிடத்த்க்கது.

மேலும் நோயாளர்கள் வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்படும் சந்தர்ப்பங்களில் பயணக்கட்டுப்பாடுகள் பொலிஸாரின் கட்டுப்பாடுகள் மற்றும் தமக்கு கொரோனா தொற்றிவிடும் என்ற பயம் போன்ற காரணங்களால் அதிகளவான மனஉளைச்சலை சந்திப்பதாக தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸின் கட்டுப்பாடுகளுக்காக விதிக்கப்பட்டுள்ள நடைமுறைகளால் மக்கள் எதிர்நோக்கியிருந்த சிக்கல்களும் உயர்குருதியமுக்கத்துக்கு வித்திட்டுள்ளது.

உலக நாடுகள் அனைத்திலும் வியாபித்துள்ள கொரோனா வைரஸின் தாக்கத்தால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு நாடும் வைரஸ் பரவலை மேலும் தடுக்கும் நோக்கில் கட்டுப்பாடுகளை விதிப்பது என்பது தவிர்க்க முடியாத ஒரு விடயமாக மாறியுள்ளது.

Read next: பிரித்தானியாவின் பயணப் பட்டியலில் இணைந்த நாடுகள் இதோ..