வெள்ளிக் கிழமையும், பெண் தெய்வங்களும்!!

May 13, 2022 06:44 am

வெள்ளிக் கிழமையும், பெண் தெய்வங்களும்:

தெய்வங்களில் பெண் தெய்வங்களே மிகுதி என்பதால் பெண்தெய்வங்கள் முதன்மை நிலையில் வைத்து விளக்கப் படுகின்றன.

இனக்குழுச் சமுதாயத்தின் தொடக்கக் காலந்தொட்டுச் செழுமையின் அடையாளமாகவும் வலிமையின் குறியீடாகவும் பெண் கருதப்பட்டதால் பெண் வணங்குதற்கும் வழிபாட்டிற்கும் உரியவளானாள்.

பண்டைத் தமிழ் இலக்கியங்களில் பெண் தெய்வப் பெயர்களும் பெண் தெய்வ வழிபாடுகள் பற்றிய குறிப்புகளும் நிறைந்து காணப்படுகின்றன.

தாய்த் தெய்வங்கள், கன்னித் தெய்வங்கள என இரு பிரிவாக வணங்கப்படுகிறது.

மனித உயிர்கள் அனைத்தையும் பெற்றெடுத்தவள் என்ற அடிப்படையில் தாயாகவும், என்றும் மாறாத, அழியாத கன்னித் தன்மையுடையவள் என்ற அடிப்படையில் கன்னியாகவும் பெண் தெய்வங்களை வழிபடும் மரபு காணப்படுகிறது.

உலகின் பல்வேறு நாடுகளிலும் கூட இம்மரபு இருந்து வருவது குறிப்பிடத் தக்கதாகும்.

அம்மன் தாய்த் தெய்வ வழிபாடு:

‘அம்மன் என்ற பொதுப் பெயரால் அழைக்கப்படும் பெண் தெய்வங்கள், பெண்மை மற்றும் தாய்மைக் குணங்களை ஒருசேரப் பெற்றவையாக விளங்குகின்றன.

தொடக்கக் காலத்தில் வளமை தொடர்பான சடங்குகள் பெண்களைக் கொண்டே மேற்கொள்ளப்பட்டதால் பின்னாளில் பெண்களே வளமையின் குறியீடாகக் கருதி வழிபடப் பட்டனர். இதுவே, தாய்த் தெய்வ வழிபாடு தோன்றி வளர்வதற்குக் காரணமாய் அமைந்தது.

‘மழையாகப் பொழிந்து மண்ணுயிர்களைக் காப்பவள் மாரியம்மா; நதியாக ஓடி நஞ்சை புஞ்சைகளைக் காப்பவள் கங்கையம்மா; தீமைகள் அண்டாதவாறு காப்பவள் எல்லையம்மா என்று, பெண் தெய்வங்கள் வளமையை மையமிட்டே வணங்கப் பட்டன; வழிபடப் பட்டும் வருகின்றன.

நதிகள்:

காவிரி, கங்கை, யமுனை, சரசுவதி போன்ற பெரு நதிகளைப் பெண் தெய்வங்களாகவும் தாய்த் தெய்வங்களாகவும் வழிபடுவது இந்திய மரபாகும்.

நாட்டுப்புறச் சிறுதெய்வங்களாக மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன், சீலைக்காரியம்மன், திரௌபதையம்மன், நாச்சியம்மன், பேச்சியம்மன், கண்டியம்மன், வீருசின்னம்மாள், உச்சிமாகாளி, மந்தையம்மன், சோலையம்மன், ராக்காச்சி, எல்லையம்மன், அங்காளம்மன், பேச்சி, இசக்கி, பேராச்சி, ஜக்கம்மா போன்ற பெண் தெய்வங்கள் வணங்கப்பட்டு வருகின்றன.

நன்மை அளிக்கும் தெய்வங்கள், தீமை அளிக்கும் தெய்வங்கள் என்று கூட இவற்றை வகைப்படுத்துவதுண்டு. 

சக்தியின் அவதாரமாக, வடிவமாகப் பெண் தெய்வங்கள் கருதப்பட்டு வணங்கப் படுகின்றன. 

Read next: டான் முதல் நாள் முதல் காட்சி.!! ட்விட்டரில் கலாய்க்கும் புளூ சட்டை மாறன்.. என்ன போஸ்ட் தெரியுமா?