உடலுக்கு முக்கியமான நார்ச்சத்து.... எந்த உணவுல அதிகமா இருக்குன்னு பாக்கலாமா?

Jun 11, 2021 06:57 pm

சென்னை : நமது உடலுக்கு தேவையான சத்துக்களில் முக்கியமானது நார்ச்சத்து. பைபர் எனப்படும் இந்த சத்துக்கள் கரையும் மற்றும் கரையாத சத்துக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இவை நாம் சாப்பிடும் உணவின் மூலம் பெறப்படுகின்றன. இவை முழுமையாக செரிமானம் ஆகாது. ஆனால் செரிமானத்தை அதிகப்படுத்துகின்றன.

இவற்றை தினமும் எடுத்துக் கொள்வதால் இதய நோய்கள், மூல நோய், நீரிழிவு உள்ளிட்ட நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும். இந்த சத்து காய்கறி மற்றும் பழங்களில் அதிகமாக காணப்படுகிறது. ஆண்கள் 38 கிராம் அளவிலும் பெண்கள் 25 கிராம் அளவிலும் தினந்தோறும் நார்ச்சத்துக்களை எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஓட்ஸ், பீன்ஸ், வேர்க்கடலை, அரிசி உமி, பார்லி, சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள், ஆப்பிள், கோதுமை, போன்றவை கரையும் நார்ச்சத்துக்களாக உள்ளன. இவை நமது உடலில் கொலஸ்ட்ராலை குறைக்கும். இதேபோல பழங்கள், காய்கறிகள், தானியங்களிலும் ஆப்பிள் தோல், முட்டைகோஸ், பீட்ரூட், காலிப்ளவர், கேரட் போன்றவற்றில் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளன.

இதன்மூலம் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் நம்மை அண்டாது.

குறிப்பாக ஆப்பிளில் அதிகமான அளவில் நார்ச்சத்து காணப்படுகிறது. 100 கிராம் ஆப்பிளில் 2.5 கிராம் நார்ச்சத்து உள்ளது. இதேபோல விலை மலிவான வாழைப்பழத்திலும் அதிகமான நார்ச்சத்து உள்ளது. 100 கிராம் வாழைப்பழத்தில் 2.6 கிராம் நார்ச்சத்து காணப்படுகிறது. இதன்மூலம் ரத்த அழுத்தம் குறைக்க உதவிபுரிகிறது.
இதேபோல கொய்யா பழத்திலும் நார்ச்சத்து அதிகமாக காணப்படுகிறது. 100 கிராம் கொய்யாவில் 5 கிராம் நார்ச்சத்து உள்ளது. 100 கிராம் அத்திப்பழத்தில் 2.9 கிராம் நார்ச்சத்து உள்ளது. கேரட் மற்றும் காலிப்ளவரிலும் முறையே 3.6 கிராம் மற்றும் 2.5 கிராம் நார்ச்சத்து காணப்படுகிறது.

இதனிடையே ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்து காணப்படும் கருப்பு உளுந்தில் தினசரி தேவைக்கு தேவையான 48 சதவிகித நார்ச்சத்து காணப்படுகிறது. 100 கிராம் உளுந்தில் 18.3 கிராம் நார்ச்சத்து உள்ளது. இதேபோல 100 கிராம் பாதாம் பருப்பில் 13 கிராம் நார்ச்சத்து உள்ளது.

100 கிராம் கொண்டைக்கடலையில் 17 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது தினசரி உடலுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவில் 68 சதவிகிதம் ஆகும். இதேபோல 100 கிராம் பாசிப்பயிறிலும் 16 கிராம் நார்ச்சத்து காணப்படுகிறது. 100 கிராம் பார்க்கார்னிலும் 14.5 கிராம் நார்ச்சத்து காணப்படுகிறது.


இவ்வாறு உடலுக்கு அதிகமான நன்மையை செய்யும் நார்ச்சத்து உள்ள உணவுகளை நாம் தேடிப்பிடித்து சாப்பிடுவது சிறப்பானது. இதன்மூலம் நீரிழிவு உள்ளிட்ட முக்கியமான நோய்களில் இருந்து நம்மால் தள்ளி இருக்க முடியும்.

Read next: கட்டுப்பாடுகள் நீக்குவதை ஜூலை 19 வரை தாமதப்படுத்த போரிஸ் ஜோன்சன் திட்டம்