எலான் மஸ்க் அதிரடி - ஆலோசகராக நியமிக்கப்பட்ட தமிழர்

Nov 02, 2022 04:05 am

டுவிட்டா் நிறுவனத்தை வாங்கியுள்ள டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்குப் புதிய நிா்வாகிகளை நியமித்து வருகின்றார்.

இந்த நிலையில், அவரது தொழில்நுட்ப ஆலோசகராக சென்னையைச் சோ்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன் செயல்பட்டு வருகிறார் என தெரியவந்துள்ளது.

டுவிட்டா் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த வாரம் சொந்தமாக்கிக் கொண்டார். முதல் நாளிலேயே, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த இந்தியரான பராக் அக்ரவால் உள்ளிட்ட ஐவரை அவா் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இதையடுத்து, நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்குப் புதிய அதிகாரிகளை அவர் நியமித்து வருகிறார்.

இந்நிலையில், இந்திய அமெரிக்கரும் சென்னையைச் சோ்ந்தவருமான ஸ்ரீராம் கிருஷ்ணன், டுவிட்டா் உரிமையாளா் எலான் மஸ்குக்கு தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்கின் தலைமையில் டுவிட்டர் நிறுவனம் சா்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என டுவிட்டரில் அவா் பதிவிட்டுள்ளார்.

ஆண்ட்ரீசன் ஹோரோவிட்ஸ் (ஏ16இஸட்) என்ற நிறுவனத்தில் தற்போது பணியாற்றி வரும் ஸ்ரீராம் கிருஷ்ணன், தற்காலிகமாகவே எலான் மஸ்குக்கு ஆலோசனை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஏ16 இஸட் நிறுவனத்தின் முழுநேரப் பணியில் தொடா்ந்து நீடிப்பதாகவும் அவா் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் எஸ்ஆா்எம் பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்ற ஸ்ரீராம் கிருஷ்ணன், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் தனது பணியைத் தொடங்கினர். அதன்பிறகு பல்வேறு புத்தாக்க (ஸ்டாா்ட்-அப்) நிறுவனங்களின் ஆலோசகராக அவர் செயல்பட்டுள்ளார்.

வாடிக்கையாளர்களுக்குப் புதிய சேவைகளை வழங்கும் விவகாரம் தொடா்பான டுவிட்டா் குழுவின் ஆலோசகராகவும் ஸ்ரீராம் கிருஷ்ணன் ஏற்கெனவே செயல்பட்டுள்ளார்.


Read next: ஐரோப்பிய நாடொன்றில் கடலில் விழுந்து மாயமான 60 அகதிகள்