லடாக் பகுதியிலிருந்து இந்திய மற்றும் சீன ராணுவ விலகல் ஆரம்பம்-சீன பாதுகாப்பு துறை பேச்சாளர்

Feb 10, 2021 03:24 pm

ராணுவ கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு லடாக் எல்லையில் இந்தியா-சீன படைகளை விலக்கும் நடவடிக்கை இன்று தொடங்கி உள்ளது.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில், லடாக் எல்லையில் பாங்கோங் ஏரி பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றதால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளும், மோதலும் ஏற்பட்டது. கடந்த ஜூன் மாதம் நடந்த இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இதனால் எல்லையில் பதற்றம் மேலும் அதிகரித்தது.

லடாக் எல்லைப்பகுதியில் சீன ராணுவம் ஏராளமான வீரர்களை குவித்துள்ளது. எல்லைப் பகுதியில் இந்திய வீரர்கள் வழக்கமான ரோந்து பணியை மேற்கொள்வதற்கும் சீனா இடையூறு செய்துவருகிறது. இதைத்தொடர்ந்து, சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவும் அங்கு படைகளை அனுப்பியது.

 இதனால் எல்லையில் பங்கோங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட பதற்றத்தை தணித்து, இரு நாடுகளும் படைகளை விலக்கிக்கொள்வது தொடர்பாக ராணுவ அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இரு நாடுகளின் கமாண்டர்கள் மட்டத்திலான 9-வது சுற்று பேச்சுவார்த்தை கடந்த மாத இறுதியில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, லடாக் எல்லையில் உள்ள பாங்கோங் ஏரி பகுதியில் இந்தியா-சீனா படைகளையும் விலக்கும் நடவடிக்கை இன்று தொடங்கி உள்ளது. இதன் மூலம் எல்லையில் படிப்படியாக அமைதி திரும்பக் கூடிய சூழல் உருவாகி உள்ளது.

பாங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரை பகுதியில் உள்ள, இரு நாட்டு படையினரும் விலகத் தொடங்கியதாக சீன பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கூறி உள்ளார். இந்த பகுதிகளில் இருந்து திரும்பிச் செல்லும் வீரர்கள், எல்லையில் ஏற்கனவே இருந்த நிலைகளுக்கு செல்வார்கள்.

Read next: இங்கிலாந்துக்கு பயணிப்பவர்கள் £1750 பிரித்தானிய பவுண்டுகள் கட்டணமாக செலுத்தவேண்டும்