அமெரிக்காவை அடுத்து உக்ரைனுக்காக கனடா செய்யும் உதவி

Jan 28, 2023 05:32 am

அமெரிக்கா மற்றும் ஜெர்மனியை அடுத்து உக்ரைனுக்கு உதவுவதற்காக கனடா முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் போரானது ஒரு முடிவில்லாமல் நடைபெற்று கொண்டிருக்கிறது. உக்ரைனுக்கு உதவும் வகையில் 31 – M1 ஆப்ராம்ஸ் போர் டாங்கிகளை (M1 Abrams Tanks) அனுப்ப அமெரிக்கா முடிவு செய்திருந்தது. 

அமெரிக்காவின் இந்த முடிவையடுத்து ஜெர்மனி தனது 14 சிறுத்தை 2 A6 வகை (Leopard 2 A6) டாங்கிகளை உக்ரைனுக்கு அனுப்ப முடிவு செய்தது. இதனையடுத்து தற்பொழுது கனடாவும் தனது நான்கு சிறுத்தை 2 (Leopard 2) டாங்கிகளை உக்ரைனின் படைபலத்தை அதிகரிக்க அனுப்ப உள்ளது.

இந்த அறிவிப்பை வெளியிட்ட தேசிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த், “இன்றைய அறிவிப்பு எங்களின் நீடித்த உறுதிப்பாட்டிற்கு சான்றாகும். உக்ரைனுக்கு உதவுவதற்கு எங்கள் நட்பு நாடுகள் ஒருங்கிணைந்து சிறுத்தை 2 டாங்கிகள் மற்றும் அவற்றை பயன்படுத்துவது குறித்த பயிற்சி ஆகியவற்றை வழங்குவோம்” என்று கூறினார். 

மேலும் உக்ரைன் தொடர்ந்து போராடி வெற்றி பெறுவதற்கு தேவையான இராணுவ உதவியை கனடா தொடர்ந்து வழங்கும் என்று உக்ரைனின் பாதுகாப்பு மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவ்விடம் உறுதியளித்தார்.

கனடா, நான்கு சிறுத்தை 2 போர் டாங்கிகளை அவற்றின் வெடிமருந்துகள் மற்றும் உதிரி பாகங்கள் ஆகியவற்றுடன் வழங்குகிறது. மேலும் டாங்கிகளை இயக்குவதற்கு உக்ரேனிய வீரர்களுக்கு பயிற்சி அளிக்க CAF நிபுணர்களையும் உடன் அனுப்புகிறது. இந்த டாங்கிகள் போர்க்களத்தில் வீரர்களுக்கு கவசமாகவும் மிகவும் பாதுகாப்பான வாகனமாகவும் செயல்படும் திறன் கொண்டுள்ளது.

Read next: ChatGPT தொழில்நுட்பம் தோல்வியா? ஆராய்ச்சியில் வெளிவந்த தகவல்