வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை சாப்பிடலாமா?

Mar 13, 2023 01:36 pm

காலை உணவு என்பது எப்போதும் ஆரோக்கியமானதாகவும், ஊட்டச்சத்து மிக்கதாகவும் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதனால் பெரும்பாலானோர் முதல் காலை உணவுக்கு வாழைப்பழத்தையே அதிகமாக தேர்வு செய்கின்றனர். பொதுவாகவே வாழைப்பழத்தில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. இருப்பினும் அதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாமா என்கிற கேள்வி முன் வைக்கப்படுகிறது. இது குறித்து ஆயுர்வேதம் என்ன சொல்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 


வாழைப்பழத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் :

வாழைப்பழத்தில் பொட்டாஷியம், மக்னீஷியம், இரும்புச்சத்து, ட்ரிப்டோபான், வைட்டமின் பி6, கால்சியம், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. 25 சதவிகிதம் சர்க்கரையும், 89 கலோரிகளும் உள்ளன. வாழைப்பழம் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சோர்வு, மலச்சிக்கல், மன அழுத்தம், நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண் ஆகியவற்றை போக்குகிறது. வாழைப்பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் உடலில் ஹீமோக்ளோபின் அளவு அதிகரித்து இரத்த சோகையை போக்குகிறது. வாழைப்பழத்தில் சர்க்கரை இருப்பதால் உடலுக்கு உடனடியாக ஆற்றலை கொடுக்கிறது.

ஊட்டச்சத்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

வாழைப்பழங்களில் இயற்கையாகவே அமிலங்கள் உள்ளன. மேலும் அவற்றில் அதிக அளவு பொட்டாசியம் அடங்கியுள்ளது. இவை காலையில் உண்ண சிறந்தது தான். ஆனால் வெறும் வயிற்றில் சாப்பிட சிறந்ததல்ல. இதை ஆப்பிள் மற்றும் பிற பழங்களுடன் கலந்து சாப்பிவது, வாழைப்பழத்தில் உள்ள அமிலங்களை குறைக்க உதவுகிறது. அதேபோல், வாழைப்பழத்தில் அதிக அளவில் மக்னீசியம் உள்ளது.

வெறும் வயிற்றில் வாழைப்பழத்தைச் சாப்பிடும்போது, அதில் இருக்கும் மக்னீசியம், ரத்தத்தில் சேரும். ரத்தத்தில் மக்னீசியத்தின் அளவு அதிகரிக்கும். ஆக, ரத்தத்தில் கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு சமநிலையில் இருக்காது. இது, இதயத்தை பாதிப்புக்குள்ளாக்கிவிடும், இது இதய நோய்களை வரவழைத்துவிடும்.

வாழைப்பழம்

ஆயுர்வேதம் என்ன சொல்கிறது தெரியுமா?

ஆயுர்வேதத்தின் படி ஒருவர் வெறும் வயிற்றில் எந்த ஒரு பழத்தையும் சாப்பிடுவது சிறந்ததல்ல. மேலும் இப்போது கிடைக்கும் பழங்கள் எதுவும் இயற்கையான பழங்களாக இருப்பதில்லை. நாம் செயற்கையாக வளர்க்கப்பட்ட பழங்களையே சாப்பிடுகிறோம். இதில் உள்ள கெமிக்கல்கள் நமது உடலுக்கு சிறந்ததல்ல. நாம் நினைப்பதை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. பிற பழங்களுடன் கலந்து சாப்பிடுவது சிறந்தது.

வாழைப்பழத்தை எப்படி சாப்பிடலாம்..?

வாழைப்பழம் ஒரு சிறந்த உணவு தான். அதை நீங்கள் வேறு சில பொருட்களுடன் சேர்த்து எடுத்துக்கொள்வது உங்கள் காலை நேரத்தை புத்துணர்ச்சியுடன் தொடங்க உதவியாக இருக்கும். பொதுவாகவே, வெறும் வயிற்றில் எந்த பழங்களையும் சாப்பிடுவது நல்லதல்ல.

ஓட்ஸ், வாழைப்பழம், நட் பட்டர் மற்றும் மேப்பிள் சிரப் சேர்த்து சாப்பிடலாம். இதனை காலை உணவாக சாப்பிட ருசியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். பெர்ரீஸ், வாழைப்பழம் இரண்டையும் சிறு துண்டுகளாக வெட்டி, ஸ்கிம்டு மில்க் உடன் சேர்த்து சாப்பிடலாம். வாழைப்பழம், நட் மில்க், கோகோ பௌடர் ஆகியவை சேர்த்து கிரீமியான ஸ்மூத்தி செய்து சாப்பிடலாம். இது உங்களை நிறைவாக வைத்திருக்கும்.


Read next: தமிழகத்தில் இன்புளுயன்சா வைரஸ் தொற்றுக்கு முதல் உயிரிழப்பு பதிவு!