சூக்காவை LTTE எனக் கூறிய பிரித்தானிய சிங்கள சட்டத்தரணி கோடிக்கணக்கில் நட்டஈடு செலுத்தினார்

Dec 14, 2022 12:34 am

இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து தகவல் வெளியிடுபவர்களை விடுதலைப் புலிகள் அனுதாபிகள் என கேலி செய்த  அரசாங்கத்திற்கு நெருக்கமான பிரித்தானியாவில் உள்ள சிங்கள புலம்பெயர் தலைவர் ஒருவர் பெரும் தோல்வியை சந்தித்துள்ளதோடு, இவ்வாறு அவமானப்படுத்திய குற்றத்திற்காக சர்வதேச சட்டத்தரணி ஒருவருக்கு பெரும் இழப்பீட்டை செலுத்தியுள்ளார்.

தென்னாபிரிக்க மனித உரிமைகள் சட்டத்தரணியும், செயற்பாட்டாளருமான யஸ்மின் சூக்கா, பயங்கரவாத அமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பக்கச்சார்பான முறையில் செயற்பட்டதாக தெரிவித்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரித்தானிய பிரதிநிதியான ஜெயராஜ் பலிஹவடன, பொய்யான தகவல்கள் அடங்கிய அறிக்கை ஒன்றைத் தயாரித்து 2021ஆம் ஆண்டு ஜெனீவாவிலுள்ள 41 இராஜதந்திர செயலகங்களுக்கு அனுப்பிவைத்தார்.

தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் தவறான தகவல்களை வெளியிடுவதை எதிர்த்து தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பிரித்தானியாவில் யஸ்மின் சூக்கா வழக்குத் தொடர்ந்தார்.

“இந்த முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டுகள், இலங்கையில் மனித உரிமைப் பாதுகாவலராக நான் பணியாற்றியதற்காக என்னை இழிவுபடுத்தும் திட்டமிட்ட முயற்சியாகத் தோன்றுகிறது.

மனித உரிமைப் பாதுகாவலர்கள், பயங்கரவாதிகள் அல்லது அவர்களைப் படுகொலை செய்ய உலகெங்கிலும் உள்ள அடக்குமுறை அரசுகளால் குணநலன் படுகொலைகள் பயன்படுத்தப்படுகின்றன.” என சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் (ITJP) நிர்வாக பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

ஜெயராஜ் பலிஹவடன என்ற சட்டத்தரணி சூக்காவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தார், ஆனால் அது நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இறுதியில், பிரதிவாதியான பலிஹவடன நீதிமன்றக் கட்டணம் மற்றும் இழப்பீடாக கணிசமான தொகையைச் செலுத்தவும், தவறான அறிக்கைகளைப் மீளப்பெறவும், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் இணையத்தில் மன்னிப்பு கோரவும், மேலும் திறந்த நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிடவும் இணக்கம் வெளியிட்டார்.

யஸ்மின் சூக்காவுக்கு எதிராக பொய்யான அறிக்கையை வெளியிட்டமைக்கான அவர் இன்று திறந்த நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.

வழக்காளிக்கு எதிராக அறிக்கைகளில் வெளியிடப்பட்ட உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுக்களை பிரதிவாதி நிபந்தனையின்றி பின்வாங்கிக்கொள்வதுடன் நிபந்தனையற்ற மன்னிப்பினையும் கோருகின்றார்.

மன்னிப்புக் கோருவதிலுள்ள உண்மைத்தன்மையை வெளிப்படுத்துவதற்காக, இவ்வறிக்கைகளின் வாயிலாக வழக்காளிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும் அவருடைய நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்திற்கும் இழப்பீடாக ஒரு தொகைப் பணத்தை வழங்குவதற்கும் பிரதிவாதி உடன்படுகின்றார்.

அத்துடன் வழக்காளியின் சட்டநடவடிக்கைகளுக்கு ஏற்பட்ட நியாயமான செலவீனத்தையும் ஏற்றுக்கொள்கிறேன்.” என ஜெயராஜ் பலிஹவடன லண்டன் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி மார்ட்டின் டேனியல் சேம்பர்லென் முன்னிலையில் தெரிவித்தார்.

அதேபோல், ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் தனது மன்னிப்பை இணையத்தில் வெளியிட்டுள்ளார்

இழப்பீட்டுத் தொகையினைப் பெறும்போது அதனைக் கொண்டு இலங்கையிலுள்ள அரசியல் கைதிகளதும், காணாமற் ஆக்கப்பட்டவர்களுடைய குடும்பங்களதும் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் திட்டம் ஒன்றை அமைப்பது தொடர்பாக தான் கலந்துரையாடிவருவதாக யஸ்மின் சூக்கா கூறியுள்ளார்.

ITJPஐ பணி பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டக் குழு, முதல் முறையாக, தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் திறந்த நீதிமன்றத்தில் அறிக்கையிட பிரித்தானிய உயர் நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று ஒரு முக்கியமான முன்னுதாரணத்தை வெளிப்படுத்தியுள்ளது.

திறந்த நீதிமன்றங்களில் வெளியிடப்படும் அறிக்கைகள், தனிப்பட்ட அல்லது இரகசியமான தகவல்களின்  அவதூறு, அவமதிப்பு, தீங்கை ஏற்படுத்தும் பொய், மற்றும் முறைகேடான பயன்பாடு என்பவற்றிற்கு அப்பாற்பட்டு, இதர நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்த தக்கவாறு கிடைக்குமா என்று நீண்டகாலமாக சட்டத்துறை சார்ந்தவர்கள் மத்தியில் இருந்து வந்த விவாதத்திற்கு இது முற்றுப்புள்ளி வைத்துள்ளது என யஸ்மின் சூக்காவுக்காக வாதாடிய சட்டத்தரணி கை வெசொல்-அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை நடைமுறைகளுக்கு எதிராக நடந்து வரும் தாக்குதல்களை ஆதரிப்பதில் இந்த முன்னுதாரணம் முக்கியமானதாக இருக்கும் என இந்த சட்டத்தரணிகள் குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

உலகளாவிய ரீதியிலுள்ள பல மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மீது அவர்களைச் செயற்பட விடாமல், உண்மையைக் கதைப்பதிலிருந்து அவர்களைத் தடுக்கும் நோக்குடன் வீசப்படும் இப்படியான அவமதிப்புக்களுக்கு எதிராக எங்களது தரப்புவாதியினது நற்பெயரைத் தக்கவைத்துக்கொண்டுள்ளோம் என்பதையிட்டு நாம் மகிழ்வடைகின்றோம்.

இந்த நீதிமன்றத்தின் முடிவானது இப்படியான செயல்களுக்கு ஒரு தடையாகச் செயற்படுவது முக்கியமாகும். அத்துடன் இதனை வலியுறுத்துவதற்கே இந்த நிதி அபராதங்கள் உதவி செய்கின்றன என சூக்காவிற்கான சட்டத்தரணியான டேனியல் மெக்கோவர் தெரிவித்துள்ளார்.

யஸ்மின் சூக்கா நன்கு அறியப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தரணியும், நிலைமாறு நீதியின் நிபுணருமாவார். அத்துடன், 19 வருடங்களாக தென்னாபிரிக்காவின் மனித உரிமைகள் அறக்கட்டளையினை நடாத்தி வந்தார். மேலும் தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் எட்டாண்டுகள் பணியாற்றினார்.

சியராலியோனின் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிலும், மத்திய ஆபிரிக்கக் குடியரசில் வெளிநாட்டு படைகளால் மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்பட்ட பாலியல் முறைகேடுகள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கென 2015இல் அமைக்கப்பட்ட மத்திய ஆபிரிக்கக் குடியரசுக்கான ஐ.நா.வின் சுயாதீன மீளாய்வுக் குழுவிலும் பணியாற்றினார்.

இலங்கையில் இடம்பெற்ற  இறுதிப்போரில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக பொறுப்புக் கூறல்தொடர்பில் 2010இல் ஏற்படுத்தப்பட்ட ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கும் மூவர் கொண்ட நிபுணத்துவர் குழுவில் ஒருவராக ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டார்.

கடந்த 6 வருடங்களாக தென்சூடானின் மனித உரிமைகளுக்கான ஐ.நா. ஆணைக்குழுவின் தலைவராகச் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்.

இவர் தலைமைதாங்கும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்றிட்டம் (ITJP) 2008-9 இல்  இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டம் தொடர்பாகவும், போருக்குப் பின்னரான சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகள் தொடர்பாகவும் ஆதாரங்களைச் சேகரித்து, பாதுகாத்துவருவதில் கவனம் செலுத்தி வருகின்றது.

இலங்கையில் கடந்த தசாப்தத்தில் நடந்த விடயங்களை உள்ளடக்கிய வாக்குமூலங்களைக் கொண்ட (400 ஆவணங்கள்) இலங்கையின் மிக முக்கிய ஆவணக்காப்பகங்களில் ஒன்று இவ்வமைப்பிடம் காணப்படுகின்றது.

(ITJP) 2017இல், இலத்தீன் அமெரிக்காவில் தூதுவராகச் செயற்பட்டுக்கொண்டிருந்த இலங்கையின் ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக தொடர்ச்சியாக அனைத்துலக நீதி வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தது.

2019ஆம் ஆண்டு சித்திரவதையால் பாதிக்கப்பட்ட 11 பேர், சித்திரவதையால் பாதிப்புக்குள்ளானவர்களின் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக கலிபோர்னியாவில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு உதவியது.

2022இல், பதவியிலிருந்து விலகுமாறு நடந்த அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து, சிங்கப்பூருக்கு தப்பிச் சென்று, சில காலம் தங்கியிருந்த, ராஜபக்சவுக்கு எதிராக சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கு குற்றவியல் முறைப்பாட்டு அறிக்கையினை ITJP அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read next: சாரதி அனுமதிப்பத்திரம் பெற்ற காத்திருப்பவர்களுக்கான விசேட அறிவிப்பு