ரொனால்டோ மற்றும் மெஸ்ஸிக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்த பாலிவுட் பிரபலம் அமிதாப் பச்சன்

Jan 20, 2023 09:46 pm

சவூதி அரேபியாவில் நேற்று நடைபெற்ற நட்புமுறை காற்பந்து ஆட்டத்தில் நட்சத்திர வீரர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயனல் மெஸ்ஸி இருவருக்கும் பாலிவுட் பிரபலம் அமிதாப் பச்சன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன

சவூதி காற்பந்துக் குழுவான அல் நாசர் ஆண்டுக்கு US$214 மில்லியனுக்கு ரொனால்டோவை ஒப்பந்தம் செய்தது. ரொனால்டோவின் இந்த ஒப்பந்தம் 2025 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மெஸ்ஸியும் ரொனால்டோவும் நேரடியாக மோதிக்கொள்ளும் நட்புமுறை ஆட்டம் சவூதி தலைநகர் ரியாத்தில் நேற்று நடைபெற்றது.

அல் நாசர் குழுவுக்கு ஒப்பந்தமான ரொனால்டோ, ரியாத் லெவன் அணிக்காகவும் மெஸ்ஸி, பாரிஸ் செயிண்ட் ஜெமேன் குழுவுக்காகவும் களமிறங்கினர். 

ஆட்டம் தொடங்குவதற்குமுன் திடலுக்கு வந்த அமிதாப் பச்சன் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ஆட்டத்தில் கோல் மழை பொழிந்தது. இறுதியில் ஆட்டம் 5-4 எனும் கோல் கணக்கில் பாரிஸ் செயிண்ட் ஜெமேனுக்குச் சாதகமாக முடிந்தது. ஆட்டத்தில் ரொனால்டோவும் மெஸ்ஸியும் கோல் போட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read next: ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 30 லட்சம் அபராதம் விதித்த இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்கம்