காபூலில் தாக்குதல் நடத்தியவர்களை வேட்டையாடுவோம்! பதிலடி கொடுப்போம் - அமெரிக்க அதிபர் சபதம்

Aug 27, 2021 04:04 am

காபூல் விமான நிலையத்தில் தாக்குதலை மன்னிக்கவும் மாட்டோம், மறக்கவும் மாட்டோம். உங்களை வேட்டையாடுவோம். பதிலடி கொடுப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சபதம் எடுத்துள்ளார்.

காபூல் விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி மாலை ஆறு மணியளவில் விமான நிலையத்தின் நுழைவு வாயில் அருகே முதல் குண்டு வெடித்தது. 

சில நிமிடங்களுக்குப் பிறகு ஆப்கானியரை மீட்பதற்காக பிரிட்டன் அதிகாரிகள் பயன்படுத்திவந்த விமான நிலையத்துக்கு அருகேயுள்ள ஹோட்டலில் மற்றொரு குண்டு வெடித்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் முகமாகவே ஜோ பைடன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பயங்கரவாதிகளால் அமெரிக்காவை ஒருபோதும் தடுக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில் மெரைன்ஸ் எனப்படும் அமெரிக்காவின் சிறப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த 11 பேரும் ஒரு கடற்படை மருத்துவர் உட்பட 13 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதத்துக்குப் பிறகு அமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்படுவது இதுவே முதல்முறையாகும்.

பிறரது உயிரைக் காப்பாற்றும் தன்னல நோக்கற்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வீரர்கள் ஹீரோக்கள் என்று பைடன் புகழாரம் சூட்டினார்.

காபூலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். கே இயக்கத்தினரால் இன்னும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் மேலும் தாக்குதல்கள் நடப்பதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பது குறித்து தாலிபன்களுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் அமெரிக்க மத்தியப் படைப்பிரிவின் தலைவர் பிராங்க் மெக்கென்சி கூறினார்.

Read next: வெனிசுலாவில் பேரனர்த்தம்! 20 பேர் பலி - பலர் மாயம்