தத்ரூப ஓவியங்களின் அரசன் இளையராஜா மரணம்… சிறு அலட்சியத்தால் மாபெரும் கலைஞனை இழந்துவிட்டோம்!

Jun 10, 2021 05:23 pm

 புகைப்படமா, ஓவியமா என எல்லோருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் தத்ரூப ஓவியங்களின் அரசன் இளையராஜா. இவரது ஓவியங்கள் உலகம் முழுக்க புகழ்பெற்றன. பல்வேறு விருதுகளையும், அங்கீகாரங்களையும் பெற்றிருக்கும் ஓவியர் இளையராஜா நேற்று நள்ளிரவு 12 மணியளில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவருக்கு வயது 43.


கும்பகோணம் அருகே செம்பியவரம்பில் எனும் கிராமத்தில் பிறந்தவர் இளையராஜா. ஐந்து அண்ணன்கள், ஐந்து அக்காக்கள் என மிகப்பெரிய குடும்பத்தில் பிறந்த கடைசி மகன். கடந்த வாரம் அக்கா மகளின் திருமணத்துக்காக கும்பகோணத்துக்குப்போனவர், சில நாட்களுக்கு முன்னர் சென்னை திரும்பியிருக்கிறார். ‘ஊரில் குளத்தில் குளித்ததால் சளி பிடித்திருக்கிறது என நண்பர்களிடம் சொன்னவர் அவராகவே மருந்து கடையில் மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டிருக்கிறார். பின்னர் அவர் குடும்பத்தில் பலருக்கும் கொரோனா தொற்றுப்பரவ ஆரம்பிக்க சில நாட்களுக்கு முன்னர் மூச்சடைப்பின் காரணமாக எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கே அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தொற்று நுரையீரல் முழுக்கப் பரவிய நிலையில் மருத்துவமனைக்கு வந்ததால், நேற்று நள்ளிரவில் மாரடைப்பு ஏற்பட மரணம் அடைந்தார் ஓவியர் இளையராஜா.ஓவியர் இளையராஜாவின் ‘திராவிடப் பெண்கள் ஓவியங்கள் பெரும்புகழ் பெற்றவை. அடுப்படியில் சமைக்கும் பெண், வாசலில் உட்கார்ந்து பூ கட்டும் பெண், ஜன்னல் வழியே வெளியே வேடிக்கைப் பார்க்கும் பெண் என கிராமத்துப் பெண்களை மிகத்தத்ரூபமாக வரைவதில் தேர்ந்தவர் இளையராஜா.


2010 காலகட்டத்தில் ஆனந்த விகடன் கதை, கவிதைகளுக்கு ஓவியங்கள் தேடிக்கொண்டிருந்தபோது ஆன்லைனில் மிகத் தத்ரூபமான ஓவியங்கள் பார்த்தேன். வரைந்தது யார் எனத்தேடியபோது அங்கேயே இளையராஜா எனப்பெயரோடு தொடர்பு எண்ணும் இருந்தது. ‘யாருமே போன் பண்ணிப் பேசனதுல இல்ல சார். அப்படியே எடுத்து பயன்படுத்திப்பாங்க. முதல்முறையா விகடன்ல இருந்துதான் என்கிட்ட பேசியிருக்கீங்க என மிகவும் சந்தோஷப்பட்டார்.


சிறுகதை, ஓவியங்களுக்கு தொடர்ந்து ஆனந்த விகடனில் இளையராஜாவின் ஓவியங்களைப் பயன்படுத்தினோம். ஒரு கட்டத்தில் இளையராஜாவின் ஓவியத்துக்கு ஏற்ப பல எழுத்தாளர்கள் சிறுகதைகளை எழுதி அனுப்பினார்கள். விகடனில் ஓவியங்கள் வருவதற்கு முன்னர் மீடியேட்டர்கள் மூலம் தன்னுடைய ஓவியங்களை விற்றுவந்தார் இளையராஜா. இதில் அவருக்கு மிகச் சொற்பமான பணம் கிடைக்கும். ஆனால், விகடனில் இவரது ஓவியங்கள் வெளிவர ஆரம்பித்தப்பிறகு வெளிநாட்டிலும், நம்மூரிலும் இருந்தும் நேரடியாகவே இவரிடம் இருந்து ஓவியங்களை வாங்க ஆரம்பித்தார்கள். இவரின் பொருளாதார நிலையும் உயர ஆரம்பித்தது.


தத்ரூப ஓவியங்களின் அரசன் இளையராஜா. இவரது இழப்பு ஓவிய உலகுக்கு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு என்கிறார் ஆனந்த விகடன் குழுமத்தின் தலைமை வடிவமைப்பாளர் கே.பாண்டியன்.

கொரோனாவால் இன்னொரு தலைசிறந்த கலைஞனைப் பறிகொடுத்திருக்கிறோம். சிறு அலட்சியம்கூட பேராபத்தில் கொண்டுபோய்விடும் என்பதை உணர்வோம்!

Read next: தமிழகத்துக்கு மேலும் 95120 கோவேக்சீன் கரோனா தடுப்பூசிகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன