இலங்கைக்கான ஆப்கான் தூதுவர் தலிபான்களை அங்கீகரிக்க மறுப்பு!

Sep 12, 2021 07:00 am

தலிபான்களின் இடைக்கால அமைச்சரவையை அங்கீகரிக்க இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் மறுத்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் தூதுவர் அஷ்ரப் ஹைதாரி,  தலிபான் அரசாங்கம் சட்டவிரோதமானது என இலங்கை அரசு மற்றும் கொழும்பிலுள்ள இராஜதந்திர சமூகத்திற்கு கடிதம் ஒன்றின் ஊடாக வலியுறுத்தியுள்ளார்.

இந்த வாரம் இடைக்கால அமைச்சரவை மற்றும் பிரதமரை நியமிப்பதாக தலிபான் அறிவித்திருந்தது. இந்நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் தூதுவர்கள் யாரும், தலிபான்களின் இடைக்கால அமைச்சரவையை வரவேற்கவில்லை என்றும்  தூதுவர் ஹைதாரி  இலங்கையிலுள்ள ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன் தலிபான் அமைச்சரவை, ஐ.நா.வால்  பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தப்பட்டவர்களை கூட அதன் தலைவராக உள்ளடக்கியுள்ளதுடன் பெண்கள், இஸ்லாமிய குடியரசு அரசாங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் அனைத்து இன, மத மற்றும் சிறுபான்மையினரையும் விலக்கியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வெளிநாட்டு ஆக்கிரமிப்பு மற்றும் வெளிநாட்டு உளவுத்துறை தலைவரால் நிறுவப்பட்ட இந்த அமைப்பு, அனைத்து ஆப்கானியர்களால் நிராகரிக்கப்பட்டது மற்றும் முழு சர்வதேச சமூகத்தால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது என்றும்  அஷ்ரப் ஹைதாரி கூறியுள்ளார்.

இந்நிலையில் உலகெங்கிலும் உள்ள அனைத்து ஆப்கானிஸ்தான் தூதரகங்களும் தங்கள் வழக்கமான கடமைகளைத் தொடரும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் ஒரு பரந்த அடிப்படையிலான மற்றும் பிரதிநிதித்துவ அரசாங்கத்தை விரும்புகிறது என்றும் தூதுவர் கூறியுள்ளார்.

Read next: பிரித்தானியா நோக்கி பயணித்த 126 அகதிகள் மீட்பு!