வயலில் வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி வாலிபர் பலி! அதிர்ச்சியில் தந்தையும் மாரடைப்பால் உயிரிழப்பு!

Jun 14, 2021 05:36 am

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மேலந்தல் கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன் (30) என்பவர்  நேற்று அதிகாலை தனது நிலத்திற்கு செல்லும் போது அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவரது மரவள்ளி தோட்டத்தில் காட்டுப்பன்றிகள் வராமல் இருக்க வயலில் வைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி உயிழந்தார்.

இதையடுத்து  பாஸ்கர்  காசிநாதனின் சடலத்தை யாருக்கும் தெரியாமல் அங்குள்ள ஏரிக்கரை புதரில் மறைத்து வைத்திருந்தார். நேற்று மாலை வரை நிலத்திற்கு சென்ற காசிநாதன் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் காசிநாதன் இறந்தது பற்றியும், அவரது சடலத்தை மறைத்தது பற்றியும் மன உளைச்சலில் இருந்த பாஸ்கர் நேற்று  நள்ளிரவு  இறந்து போன காசினாதனின் தந்தை சுப்பிரமணியிடமும், மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்  மகன் இறந்து போன அதிர்ச்சியில் தந்தை சுப்பிரமணி மாரடைப்பால் தனது வீட்டில் உயிரிழந்தார்.

தகவலறிந்த மணலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காசிநாதன், அவரது தந்தை சுப்பிரமணி இருவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மின் வேலி வைத்து காசிநாதன் உயிழப்பு காரணமாக இருந்ததாகவும், சடலத்தை மறைத்ததற்காகவும் பாஸ்கரை போலீசார் கைது செய்தனர். திருமணமாகி 6மாதத்தில் வாலிபர் காசிநாதன் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read next: வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு ஆபத்தான கொரோனா வைரஸ்! ஆய்வுகள் ஆரம்பம்