சிங்கப்பூரில் புதிய வசதி - பேருந்துக்குக் காத்திருக்கும்போது உடற்பயிற்சியும் செய்யலாம்

Nov 24, 2022 05:29 am

சிங்கப்பூரில் பேருந்துக்காகக் காத்திருக்கும் வேளையில் பலரும் தங்களின் கையடக்க தொலைபேசி பயன்படுத்துவதற்கு பதிலாக இனி அந்த நேரத்தை இன்னும் பயனுள்ள வகையில் செலவிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பூன் லேயில் முதல்முறையாகப் பேருந்து நிலையத்திலேயே உடற்பயிற்சி செய்யும் வசதி அமைக்கப்பட்டுள்ளது.

Recharge என்ற அந்தத் தொடக்கமாதிரியை சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சுகாதார அமைச்சுடனும் நிலப் போக்குவரத்து ஆணையத்துடனும் இணைந்து உருவாக்கியிருக்கின்றனர்.

அந்தத் தகவலைத் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தமது Instagram பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்.

பேருந்துக்காகக் காத்திருக்கும் வேளையில் மக்கள் சில எளிமையான உடற்பயிற்சிகளும் செய்யலாம்.

அதே நேரத்தில் தங்கள் கைத்தொலைபேசியை மின்னூட்டமும் செய்யலாம். ஒரு வாரத்தில் குறைந்தது 150 நிமிடங்கள் அவ்வாறு உடற்பயிற்சியில் ஈடுபட்டால் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்.

அந்தத் திட்டம் கடந்த திங்கட்கிழமை முதல் அடுத்த மாதம் 5ஆம் தேதி வரை இரு வாரத்திற்கு நடப்பில் இருக்கும்.

பங்கேற்க விருப்பப்படுவோர் 200 பூன் லே டிரைவில் உள்ள பேருந்து நிலையத்திற்குச் செல்லலாம்.

Read next: இலங்கையில் பரவி வரும் வைரஸ் நோய் - சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை