அமெரிக்கா செல்லும் கனவோடு உறைபனியில் உயிரிழந்த இந்திய குடும்பம்! நடந்தது என்ன?

கடந்த வாரம் கனடா- அமெரிக்கா எல்லையில் பனியில் உறைந்த நிலையில் நால்வரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
அவர்கள் யார் என விசாரித்ததில் இந்தியாவின் குஜராத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அமெரிக்கா செல்லும் கனவோடு உயிரிழந்ததும் தெரியவந்தது.
குஜராத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் (35), அவரது மனைவி வைஷாலி (33), குழந்தைகள் விஹாங்கி (12) மற்றும் தார்மிக் (3) ஆகியோர் என்பதும் அடையாளம் காணப்பட்டது.
இந்நிலையில் இவர்கள் வசித்து வந்த கிராமம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொந்த வீட்டில் வசித்து வந்த ஐகதீஷ், தன் தந்தைக்கு விவசாயத்தில் உதவி புரிந்து வந்துள்ளார், விழாக்காலங்களில் துணிகள் விற்பதும் ஐகதீஷின் வழக்கமாம், அவர்களது கிராமத்திலேயே ஆண்கள் துணிக்கான மொத்த வியாபாரியும் ஐகதீஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
கிராமத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் அமெரிக்க விசா பெறுவது தொடர்பான விதிகள் அத்துப்படியாம், அவர்களுக்கு பலதரப்பட்ட விசாக்களுக்கு இடையில் உள்ள வேறுபாடு, எந்த விசா இருந்தால் கிரீன் கார்டு அல்லது அமெரிக்கக் குடியுரிமை கிடைக்கும் என்பதும் தெளிவாக தெரியுமாம்.
அக்கிராமத்திலிருந்து பலரும் சட்டவிரோதமாகவும், சட்டப்படியும் அமெரிக்காவுக்குள் நுழைந்துள்ளார்களாம்.
அப்படி வெளிநாடு செல்லும் கனவில் இருந்த ஐகதீஷ், கனடா விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார், அங்கிருந்து அமெரிக்கா செல்ல முயன்றபோதே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.