ஆஸ்திரேலியா சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

Nov 20, 2022 02:46 am

சிங்கப்பூரிலிருந்து ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகருக்குத் சென்ற 3 பயணிகளுக்குத் தட்டம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் கடந்த திங்கட்கிழமை Qantas விமானம் QF36இல் பயணம் செய்ததாக விக்டோரியா மாநிலத்தின் சுகாதார அமைச்சு தெரிவித்தது

பாதிக்கப்பட்ட மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இருவருக்குத் தட்டம்மை இருந்தது பயணத்தின்போதே தெரிய வந்தது என்றும் அவர்கள் உடனடியாக மருத்துவரை நாடினர் என்றும் அமைச்சு கூறியது.

பாதிக்கப்பட்டவர்கள் பயணம் செய்த விமானமும் மெல்பர்ன் விமான நிலையமும் நோய் பரவக்கூடிய தளங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

QF36 விமானத்தில் பயணம் செய்தவர்கள், நவம்பர் 15ஆம் திகதி காலை 6:10 மணி முதல் 8:40 மணி வரை மெல்பர்ன் விமான நிலையத்தின் அனைத்துலக வருகைப் பகுதியில் இருந்தவர்கள் ஆகியோர் டிசம்பர் 3ஆம் திகதி வரை தங்கள் உடல்நலத்தைக் கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

தட்டம்மை நெருங்கிய தொடர்பில் எளிதில் பரவக்கூடியது. குறிப்பாகத் தட்டம்மைக்கு எதிராகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கிடையே அது அதிகமாகப் பரவும் என்று தெரிவிக்கப்பட்டது.

சிறுவர்களுக்கும் பலவீனமான நோய் எதிர்ப்புச் சக்திகொண்ட பெரியவர்களுக்கும் தட்டம்மை ஏற்படும் அபாயம் அதிகம்.

இவ்வாண்டு விக்டோரியாவில் 5 தட்டம்மைச் சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.


Read next: உலகின் அதிக அவதானத்தை பெற்ற சுவிஸ் விமானம் - அவசரமாக தரையிறக்கம்