பாகிஸ்தான் பங்குச்சந்தை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு - நான்கு பேர் உயிரிழப்பு

3 days

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று காலை 10 மணியளவில் நடந்தது.  வாகன நிறுத்துமிடம் வழியாகப் பங்குச்சந்தை கட்டடத்துக்குள் நுழைந்த துப்பாக்கிதாரிகள், பிரதான நுழைவு வாயிலில் குண்டை வீசியுள்ளனர்.

தாக்குதல் நடந்த கட்டடத்துக்கு வெளியே பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  அலுவலகத்தின் பாதுகாவலர்கள் உட்பட காயமடைந்த 3 பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் பங்குச் சந்தை தாக்குதலின் போது வர்த்தகத்தை நிறுத்தவில்லை, அதன் நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்.

துப்பாக்கிதாரிகள் சில்வர் கொரோலா காரில் வந்தனர். கட்டடத்தின் வாயில் அருகே, காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தியபோது அங்கு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இரண்டு துப்பாக்கிதாரிகள் அங்கு கொல்லப்பட்டனர். ஆனால், இருவர் எப்படியோ தப்பித்து உள்ளே சென்றுள்ளனர். காவல்துறையினர் அவர்களை பின் தொடர்ந்து சென்று சுட்டுக்கொன்றுள்ளனர் என சிந்து மாகாண கூடுதல் .ஜி குலாம் நபி மேமோன் கூறியுள்ளார்.

தீவிரவாதத்துக்கு எதிரான நமது போரை கெடுக்கும் நோக்கில், கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் நடந்த தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். சிந்து மாகாணத்தை எந்த விலை கொடுத்தும் பாதுகாப்போம் என சிந்து மாகாண ஆளுநர் இம்ரான் இஸ்மாயில் ட்வீட் செய்துள்ளார்.

தீவிரவாதிகள் மற்றும் காவல்துறையினர் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். கட்டடத்தின் நுழைவு வாயில் அருகே பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் ஷாஹித் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். மூன்று காவல்துறையினர் காயமடைந்துள்ளனர் என கராச்சி காவல்துறையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்,தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பங்குச்சந்தை அலுவலகத்தின் நான்கு பாதுகாவலர்கள் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். நவீன துப்பாக்கிகள் மற்றும் வெடி குண்டுகளைக் கைப்பற்றியுள்ளோம். எனவும் அவர் கூறியுள்ளார்.

Read next: பங்களாதேஷ் - டாக்காவில் கோர விபத்து! குழந்தைகள் உட்பட 23 பேர் பரிதாபமாகப் பலி