சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின் சக்தி சாதனங்கள் பரிசோதிக்கப்படும்

1 week

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து மின் சக்தி தொடர்பான சாதனங்களும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது என மின்துறை அமைச்சர் ஆர்கே சிங் கூறியுள்ளார்.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சாதனங்கள் மீது அதிக வரி விதிக்கவும் கடும் தரக்கட்டுப்பாட்டு நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து இறக்குமதியை குறைக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்படும் சூரிய மின்சக்தி சாதனங்களுக்கு சுங்கத் தீர்வையை ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் விதிக்கவும்  அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

மின்சாரம் அனைத்துக்கும் அடிப்படையானது என்பதால் பாதுகாப்பு நடைமுறைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீனா உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின் கட்டமைப்பு சாதனங்களில் மின்துறை செயல்பாடுகளை சீர்குலைக்கும் மால்வேர் மற்றும் வைரஸ் போன்ற மென்பொருட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் மின் கட்டமைப்புகளை சீர்குலைத்து பொருளாதாரத்தை பின்னடையச் செய்ய முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அரசுக்கு தகவல் வந்துள்ளது. இந்திய மின் துறையின் மீது மேற்கொள்ளப்படும் சைபர் தாக்குதல் பெரும்பாலும் சீனா சிங்கப்பூர் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிலிருந்து மேற்கொள்ளப்படுவதாகவும், இத்தகைய சைபர் தாக்குதலை தடுக்க ஏற்கனவே குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்தத் துறையில் ஏற்படும் சீர்குலைவு முயற்சிகள் அனைத்துத் துறைகளையும் பாதிக்கும் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Read next: அமெரிக்காவில் உடல்பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள உயிராபத்து